Ad Widget

உள்ளக விசாரணையில் சாட்சியங்களுக்கு பாதுகாப்பில்லாத போது நீதியான விசாரணை நடக்காது!

உள்ளக விசாரணையில் சாட்சிகளுக்கு பாதுகாப்பு அளிக்க கூடிய நிலையில் இலங்கை இல்லாத நிலையில் எவ்வாறு நீதியான விசாரணை நடக்கும். இது முழுமையாக ஏமாற்று வேலையே என்பதனை தமிழரசுக்கட்சியின் தலைமையும் அறிய வேண்டும் என முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

SURESH_PREMACHANDR

வவுனியாவில் அக்கட்சியின் அலுவலகத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர் –

தேர்தல் முடிந்தவுடன் நாம் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது. ஏனென்றால் பல மாற்றங்கள் நடந்திருக்கின்றது. ஜனாதிபதி மாற்றப்பட்டார், அரசியல் முறை மாற்றப்பட்டது. தற்போது இரண்டு கட்சிகள் முழுமையாக இல்லாவிட்டாலும் அரைகுறையாக இணைந்து அமைச்சராவையை உருவாக்கி அதற்கு தேசிய அரசாங்கம் என்கின்றனர்.

ஆகவே இதனூடாக பல விடங்களை அவர்களால் சாதிக்க முடியும் என்ற நிலை உள்ளது. இதற்கும் அப்பால் பல ஆண்டுகளுக்கு பின்னர் சம்பந்தனார் எதிர்க்கட்சித் தலைவராக வந்துள்ளார். ஆகவே மாற்றங்கள் என்பது பல்வேறு பட்டவிதத்தில் ஏற்பட்டுள்ளது. ஆகவே தமிழ் மக்களினுடைய தேசிய இனப்பிரச்சனையை தீர்ப்பது அதனை எவ்வாறு கையாள்வது போன்ற பல பிரச்சனைகளும் எமக்கு முன்னால் வந்துள்ளது.

உண்மையில் இதில் உள்ள பிரச்சினை ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினால் தமிழ் மக்கள் மீது ஏற்படுத்தப்பட்ட யுத்த குற்றங்கள் மனித குலத்தின் மீதான குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் அதற்கும் அப்பால் இனப்படுகொலை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு அந்த விசாரணை அறிக்கை நேற்று இலங்கை அரசிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 22ஆம் திகதிக்கு முன்னதாக இந்த அறிக்கையை நீங்கள் பார்க்கக் கூடியதாக இருக்கும். இந்த விசாரணை அறிக்கை வரும் என்பது எல்லோரும் அறிந்த தெரிந்த விடயம். இந்த விசாரணை அறிக்கையில் உள்ளக பொறிமுறை ஒன்றை உருவாக்குவது தொடர்பான விடயம் வரும் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விடயம்.

இவ்வாறான சூழ்நிலையில் இந்த அறிக்கை வந்துவிட்டது. தற்போது அடுத்தது என்ன என்பதே கேள்வியாகவுள்ளது. இந்த அறிக்கையில் இங்கு பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக குறிப்பிடலாம். இதற்கு யார் காரணமாக இருந்தார்கள் என்று இந்த அறிக்கையில் குறிப்பிடலாம். இதற்கு அரசியல்வாதிகள் காரண கர்த்தாக்களாக இருந்திருப்பார்கள். இராணுவத் தலைவர்கள் காரணமாக இருந்திருப்பார்கள்.

ஆகவே இந்த அறிக்கையை வைத்து என்ன செய்வது?. அறிக்கைக்கு அடுத்த கட்டம் என்ன? இவர்கள் தண்டிக்கப்படுவார்களா? தண்டிக்கப்படுவார்களாக இருந்தால் யாரால் தண்டிக்கப்படுவார்கள். இவர்களை தண்டிப்பத்கு சட்டமுறைகள் எங்கு எல்லாம் இருக்கின்றது போன்ற பல பிரச்சனைகள் தற்போது எழுந்திருக்கின்றது.

இவ்வாறான விசாரணையை மேற்கொண்டு அறிக்கையை தயாரிக்க வேண்டும் என்று கூறிய அமெரிக்கா தற்போது உள்நாட்டில் இலங்கை அரசுடன் சேர்ந்து ஒரு பொறிமுறையை உருவாக்குவோம் என்று கூறுகின்றார்கள். அதாவது உள்நாட்டில் இரண்டு அல்லது மூன்று நீதிபதிகளை வைத்து நான் அறிந்தவரையில் மூன்று நீதிபதிகளை வைத்து உள்நாட்டு பொறிமுறை. அவர்கள் இந்த அறிக்கையை பார்ப்பார்கள். மேற்கொண்டு என்ற நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பாக அந்த நீதிபதிகள் இலங்கையில் இருக்க கூடிய சட்டதிட்டத்தின் அடிப்படையில் அவர்கள் இந்த விடயங்களை கையாள்வார்கள். உள்ளக பொறிமுறை ஊடாக அடுத்த கட்ட நடவடிக்கை யார் யாரை கூப்பிட்டு விசாரிப்பது. தளபதிகளை விசாரிப்பதா? இராணுவத்தில் பிரிகேடியர், கேணல், லெப்டினன் கேணல் இவ்வாறாக பல தரப்புக்களையும் அரசியல்வாதிகளையும் முன்னாள் ஜனாதிபதி மற்றும் கோத்தபாய ராஜபக்‌ஷ ஆகியோரை விசாரிப்பதா?

ஏனெனில் யுத்தகாலத்தில் எழுபதனாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் என ஐ.நாவின் அறிக்கை கூறுகின்றது. ஆகவே இவ்வளவு தூரம் கொலைகள் நடப்பதற்கு காரண கர்த்தாக்கள் யார்? என்ன விதத்தில் இந்த கொலைகள் நடைபெற்றன? எனவே இவைகளுக்கு உள்ளக விசாரணைகள் மூலம் தீர்வு எட்டமுடியுமா என்பதே தற்போதைய கேள்வி.

இலங்கையின் அரசியல்சாசனத்தில் இவ்வாறன விடயத்திற்கு எந்தவிதமான அம்சங்களோ சரத்துக்களோ இல்லை. இலங்கையில் உள்ள சட்டம் ஒன்றிரண்டு கொலைகளை செய்பவர்களுக்கு தண்டனை வழங்குவதாகவே உள்ளது. மனித படுகொலையை விசாரிப்பதற்கும் தண்டனை வழங்குவதற்கும் அரசியல்சாசனத்தில் இடம் இல்லை. அடுத்து இலங்கையில் விசாரிப்பதாக இருந்தால் இதற்கு சாட்சியம் சொல்வதற்கு யார் போவார்கள்? இதில் ஈடுபட்ட இராணுவத்தினர் போவார்களா? சாட்சியமளித்த பின் அவர்கள் உயிருடன் இருக்க முடியுமா? அவர்களுக்கு பாதுகாப்பு இருக்கின்றதா? அல்லது இதில் பாதிக்கப்பட்ட மக்கள் சாட்சியமளிப்பார்களா? அவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமா? அல்லது இந்த யுத்தத்தில் ஈடுபட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

அவர்கள் வாராந்தம் மாதாந்தம் பொலிஸ் நிலையங்களில் கையெழுத்திட வேண்டும். இந் நிலையில் இவர்கள் சாட்சியம் சொல்வார்களா? அதன் பின் இவர்களுக்கு பாதுகாப்பு உள்ளதா என்று பார்த்தால் இவை எதுவும் இலங்கையில் நடைமுறை சாத்தியமற்றது.

உள்நாட்டில் விசாரணை மேற்கொள்வது என்பது காலத்தை விரையமாக்கி காலத்தை இழுத்தடித்து குற்றச்செயலை மக்கள் மறந்துபோகக்கூடிய சூழலை உருவாக்கி இங்கு எதுவும் நடக்கவில்லை என்பதற்காகவே உள்ளக விசாரணை வழிவகுக்குமே தவிர இதனால் வேறு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை.

மாறாக இந்த அறிக்கையை அடுத்த கட்டமாக என்ன செய்யலாம். நாங்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இவ் அறிக்கையை அனுப்பலாம். ஆனால் இந்த நீதிமன்றத்திதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே இதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை நாங்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என அரசு கூறும். அடுத்து ஐ.நா சபையில் பாதுகாப்பு சபைக்கு இந்த அறிக்கை போகுமாக இருந்தால் அதனை பாதுகாப்பு சபை ஏற்றால் குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்ப முடியும்.

ஆனால் பாதுகாப்பு சபை ஏற்றுக்கொள்ளுமா ஏற்றுக்கொள்ளாதா? என்பதே கேள்வியாக உள்ளது. ஆனால் நாம் பாதுகாப்பு சபைக்கு அனுப்புவதற்கான முயற்சியை மேற்கொள்ளவேண்டும். அதை விடுத்து அவர்கள் ஏற்பார்களா இல்லையா இதெல்லாம் அனுப்பினால் தானே தெரியும். வேறு நாடுகளில் இவ்வாறு நடந்தபோது வீட்டோ பயன்படும் என்று எண்ணியபோது எவரும் வீட்டோ பவரை பயன்படுத்தாமையால் குற்றவியல் நீதிமன்றத்திற்கு அவ்விடயங்கள் சென்றது. தண்டனைகளும் கிடைத்திருந்தது.

ஆனால் நாங்கள் அதனை பார்காப்பு சபைக்கு அனுப்பாமல் சீனா எதிர்க்கும் என்று சொல்லிக்கொண்டிருக்கின்றோம். ஆகவே முடிவென்ன உள்ளக விசாரணை. அதனால் யாருக்கு என்ன பலன் கிடைக்கப்போகின்றது. தமிழ் தேசியக்கூட்டமைப்பு கடந்த காலங்களில் சொல்லியிருந்தது எமக்குள்ள ஒரேயொரு பிடிமானம் என்பது சர்வதேச விசாரணை தான். இந்த சாவதேச விசாரணை சரியான முறையில் நடத்தப்பட்டால் யுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு விமோசனத்தை கொண்டவரும் என்று கூறப்பட்டது.

இன்று இலங்கை அரசு சொல்கின்றது ஜனாதிபதியை காட்டிக்கொடுக்கமாட்டோம். இராணுவத்தை காட்டிக்கொடுக்கமாட்டோம். அவர்களுக்கு எதிராக எதையும் செய்யமாட்டோம் என இவ்வாறு சொல்லக்கூடிய அரசாங்கம் எவ்வாறு நீதியான விசாரணையை நடாத்தும்.

ஆகவே நாங்கள் சர்வதேச சமூகத்தால் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம். சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் புதிய அரசாங்கத்தால் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளமையால் புதிய அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு தற்போது வந்துள்ளது.

அதனால் புதிய அரசாங்கத்திற்கு எதிராக எதையும் செய்யக்கூடாது என்ற நிலையில் அது உள்ளது. ஆகவே உள்ளக விசாரணை என அவர்கள் சொல்கின்றார்கள்.

ஆகவே இவ்வாறான சூழ் நிலையில் தான் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் உள்ள மூன்று கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சி தலைவர்களும் கூடி பேசி கையொப்பமிட்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளருக்கு உள்ளக விசாரணையில் எந்தளவு தூரம் பொய்யானது என கடிதம் அனுப்பினோம்.

இதேபோல் வடக்கு மாகாணசபையும் ஓர் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. ஆனால் தமிழரசுக் கட்சியின் தலைமையில் உள்ள ஓரிருவர் நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ உள்ளக விசாரணை வரப்போகின்றது.

ஆகவே நாங்களும் சேருவோம் என்கின்றனர். இது சரியான ஒரு தலைமைக்கு அழகாக இருக்க முடியாது. நாங்கள் சேர்ந்து போய் எதனை சாதிக்கப்போகின்றோம் எதுவுமே இல்லை. ஆகவே இதனை எவ்வாறு சரியான முறையில் முன்னெடுத்து செல்லலாம் என்பதே முக்கியமான விடயம்.

ஆகவே தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுபட்டு உள்ளக பொறிமுறை சரிப்பட்டு வராது என்பதனை தமிழரசுகட்சியின் தலைமைக்கு கூற வேண்டும். சில மாற்றம் அவர்களில் தெரிந்தாலும் கூட முழுமையாக உள்ளக விசாரணை என்ற நிலையில் இருந்து மாறுவார்களா என்பது கேள்விக்குரியதே.

எனினும் அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். சர்வதேச விசாரணைக்கான அழுத்தங்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பு கொடுக்கவேண்டும் எனத் தெரிவித்தார்

Related Posts