Ad Widget

உள்ளக விசாரணையில் எமக்கு நம்பிக்கை இல்லை அது இன்னும் காலதாமதத்தை ஏற்படுத்தும்: மாவை

உள்ளக விசாரணையில் எமக்கு நம்பிக்கை இல்லை. அது இன்னும் காலதாமதத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே தெரிவித்ததை போன்று மார்ச் மாதம் ஐ.நா அறிக்கை வெளியிடப்படவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்’ என தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் வெளியிடப்படவேண்டிய அறிக்கையை மார்ச் மாதமே வெளியிடவேண்டும் எனக்கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு பேரணி செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்றது.

இந்தப் பேரணியின் முடிவில் நல்லூர் வடக்கு பகுதியில் வைத்து, ‘கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் கிடப்பில் போடப்பட்ட நிலையிலும், காணாமற்போனோர்களின் விசாரணைகள் 2 ஆண்டுகளை கடந்த நிலையிலும் இன்னுமொரு உள்ளக விசாரணை என்பது எவ்வாறு சாத்தியப்படும் என்று நினைக்கின்றீர்கள் என அவரிடம் ஊடகவியலாளர்கள் வினாவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

‘மார்ச் மாத அமர்வில் ஐ.நா தனது அறிக்கையை வெளியிடவேண்டும் என்று நாம் ஏற்கனவே விடுத்த கடிதத்தில் தெளிவாக வலியுறுத்தியுள்ளோம். கட்சியில் உள்ளவர்களின் மாற்றுக் கருத்துக்கள் எதுவும் எனக்கு கிடைக்கப்பெறவும் இல்லை. நான் அறியவும் இல்லை. எதிர்வரும் முதலாம் திகதி கட்சியின் செயற்குழு கூடவுள்ளது. அதில் தெளிவான அறிக்கையொன்று வெளியிடப்படும்.

நான் அறிந்த வகையில் ஐ.நா சமர்பிக்க விடுத்த அறிக்கை கடினமானதாக உள்ளதாக அறிந்தேன். அதன் அடிப்படையில் இந்த தாமதம் செய்யப்பட்டுள்ளது. இங்கு வந்திருந்த ஐ.நா பிரதிநிதிகளிடம் மக்கள் பிரச்சினை, எதிர்பார்ப்பு தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளோம்.

தொடர்ந்து இம்மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடு தொடர்பாகவும் தெரியப்படுத்தி, உரிய முன்னெடுப்புக்களை மேற்கொள்வோம்’ என்று கூறினார்.

Related Posts