Ad Widget

உள்ளகப் பொறிமுறையில் தீர்வுகாண தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தயாரில்லை – சுமந்திரன்

தமிழர் பிரச்சினைக்கு உள்ளகப் பொறிமுறை ஒன்றின் மூலம் தீர்வு காண தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணங்கியுள்ளதாகப் பொய்யான பிரச்சாரம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்.

யாழ்ப்பாணம் – உசன் ஸ்ரீமுருகன் விளையாட்டுக்கழக மைதானத்தில் நேற்றிரவு (வியாழக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய சுமந்திரன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக்குப் பின்னர் வர இருக்கின்ற யோசனையில், இனப்பிரச்சினைக்கான தீர்வு அல்லது நல்லிணக்கம் என்பது இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என மனித உரிமைகள் பேரவை கூறவுள்ளதாக வதந்தி வந்திருக்கிறது.

இந்த வதந்தியை வைத்துக்கொண்டு உள்ளகப் பொறிமுறை ஒன்றின் மூலம் தீர்வு காண தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணங்கியுள்ளதாகப் பொய்யான பிரசாரம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாங்கள் மிகவும் திட்டவட்டமாக, மக்களுடைய பிரதிதிகளாக, சர்வதேசத்தின் முழுமையான விசாரணைகளின் மூலமாகத்தான் இந்த நாட்டிலே நடைபெற்ற எல்லா விதமான குற்றங்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்பதைக் கூறியிருக்கின்றோம்.

உண்மையான நல்லிணக்கம் ஏற்படுவதாக இருந்தால், அத்தனை உண்மையும் சர்வதேசத்தின் ஈடுபாட்டின் மூலமாக வெளிக்கொண்டு வரப்பட்டு அதன் மூலம் உண்மையான நல்லிணக்கம், ஒரு அரசியல் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை நாங்கள் கொள்கையாகக் கொண்டிருக்கின்றோம்.

எத்தனை பொய் பிரச்சாரங்கள் இன்று எழுந்துள்ளன.

அவ்வாறான பொய் பிரச்சாரங்களைச் செய்தவர்கள்தான் இன்றைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து கசிந்தது என்று சொல்லப்படுகின்ற பொய் பிரசாரங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது கட்டப்பார்க்கிறார்கள் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் இதன்போது தெரிவித்தார்.

ஐ.நா விசாரணையினை உள்ளக விசாரணையாக முடக்கியது தமிழ் தேசிய கூட்டமைப்பே என, தமிழ் தேசிய மக்கள் முண்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts