Ad Widget

உலகின் மிகப்பெரிய திருட்டுக் கும்பல் ராஜபக்‌ஷ படையணியே!

“ராஜபக்‌ஷ படையணிதான் உலகிலேயே மிகப்பெரிய திருட்டுக் கும்பல். திருடப்பட்ட விதங்கள் இன்னும் மூன்று மாதங்களில் அம்பலப்படுத்தப்படும். சட்டத்தரணிகளைத் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.”- இவ்வாறு பிதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் தெரிவித்தார்.

நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10.30 மணிக்கு பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத் தாக்கல், வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று ஆரம்பமானது.

இதன்போது, இலங்கையில் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற பொருளாதார மாநாட்டுக்கு ஜோர்ஜ் சொரோஸ் சிறப்பு அதிதியாக அழைக்கப்பட்டுள்ளார் எனச் சுட்டிக்காட்டி அதனுடன் தொடர்புடைய ஐந்து வினாக்களை அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவிடம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எழுப்பியிருந்தார்.

“மேற்படி வினாக்கள் நேற்று (நேற்றுமுன்தினம்) தான் எனக்கு கிடைத்தது. ஆகவே, பதிலளிப்பதற்கு எனக்கு இரண்டு வாரங்கள் அவகாசம் தேவை. அத்துடன், இந்த வினாக்கள் எனது அமைச்சுக்குரிய விடயதானங்களுடன் தொடர்புடையதான எனப் பார்க்க வேண்டும்” என்று கூறினார் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம.

இதன்போது குறுக்கீடு செய்த உதய கம்மன்பில, கடந்த டிசம்பர் மாதத்திலேயே இந்த வினாக்களை சமர்ப்பித்துவிட்டேன். தற்போது மாநாடும் முடிந்துவிட்டது என்று சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து பிரதமர் எழுந்தார். கடும் சீற்றத்துடன் அவர் கருத்து வெளியிட்டார். இடையிடையே கிண்டலும் அடித்தார்.

அதாவது, “ஜோர்ஜ் சொரொஸை அரசு அழைக்கவில்லை. அவர் வந்துதான் இங்கு மாநாடு நடத்தி எனக்கும், ஜனாதிபதிக்கும் அழைப்பு விடுத்தார். அரசு எவ்வித செலவீனங்களையும் இதற்காக செய்யவில்லை.

நீங்கள் ஆதரவு வழங்கிய ராஜபக்‌ஷ படையணி போல் அவர்கள் திருடர்கள் அல்லர். ராஜபக்‌ஷ படையணிதான் மிகப்பெரிய திருட்டுக்கும்பலாகும். ஆயிரம் பில்லியன் ரூபாவுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. மக்கள் வளங்களும் சூறையாடப்பட்டுள்ளன. வெட்கம் இல்லையா?

மஹிந்த ஆட்சியில்தான் வெற்றிலை வைத்து அழைப்பு விடுத்தீர்கள். நாம் யாரையும் அழைக்கவில்லை. எம்மைத் தேடி வருகின்றனர். உங்கள் ஆட்சிப்போன்று (மஹிந்த ஆட்சி) எங்களிடம் திருட்டுப் பொருளாதாரக்கொள்கை இல்லை.

இன்னும் 3 அல்லது 4 மாதங்களில் திருடப்பட்டவிதம், தரவுகளை வெளிப்படுத்துவோம். சட்டத்தரணிகளை தயாராக்கிக்கொள்ளுங்கள்” – என்றார் பிரதமர்.

Related Posts