கடந்த ஆகஸ்ட் மாதம், உலகின் சராசரி புவி வெப்பநிலையானது தொழில்துறைக்கு முந்தைய காலத்தை விட 1.5 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக உயர்ந்து, மனித வரலாற்றிலேயே மிக வெப்பமான மாதமாகப் பதிவாகியுள்ளது என ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற மையம் இன்று வியாழக்கிழமை (10) தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தின் சராசரி புவி மேற்பரப்பு காற்றின் வெப்பநிலை 16.96°C ஆகப் பதிவாகியுள்ளது. இது 19 ஆம் நூற்றாண்டின் சராசரி வெப்பநிலையை விட 1.65°C அதிகமாகும்.
நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் பிராந்தியத்தில் நூற்றுக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளுக்கு காலநிலை மாற்றமே முக்கிய காரணம் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தோனேசியா முதல் கிரீஸ் மற்றும் பெல்ஜியம் வரை வரலாறு காணாத காட்டுத்தீ பரவியதுடன், ஹங்கேரி மற்றும் ருமேனியாவில் கடுமையான வறட்சி நிலவியது.
வெப்ப அலையின் காரணமாக வீதிகள் உருகியதுடன், தொடருந்து தண்டவாளங்கள் வளைந்து, பாடசாலைகள் மூடப்பட்டு, வைத்தியசாலைகள் நிரம்பி வழிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தின் கீழ் உலகின் நீண்டகால சராசரி வெப்பநிலை உயர்வை 1.5°C க்குள் கட்டுப்படுத்த 200 நாடுகள் உறுதியேற்றிருந்தன. ஆனால், நவம்பர் 2025 க்கு பிறகு உலக சராசரி வெப்பநிலை 1.5°C ஐத் தாண்டுவது இதுவே முதன்முறையாகும்.
பசுபிக் பெருங்கடலில் தீவிரமடைந்து வரும் ‘எல் நினோ’ காலநிலை மாற்றத்தின் காரணமாகக் கடல் மேற்பரப்பு வெப்பநிலையும் சாதனை அளவை எட்டியுள்ளது. இது வரும் மாதங்களில் புவி வெப்பநிலையை மேலும் உயர்த்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கார்பன் உமிழ்வைக் குறைக்காவிட்டால், காலநிலை மாற்றம் அன்றாட வாழ்க்கையை மேலும் கடுமையாகப் பாதிக்கும் எனச் சர்வதேச விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.