Ad Widget

உறவுகளுக்காக அழ முடியாத ஜனநாயக நாட்டில் நாம் இருக்கின்றோம்: மாவை எம்.பி

‘எங்கள் உறவுகளுக்காக அழ முடியாத ஜனநாயக நாட்டில் நாங்கள் இருக்கின்றோம். தென்பகுதி போர் வெற்றிக் கொண்டாட்டம் தமிழர்களின் கண்ணீரில் நெருப்பை மூட்டுவதாக இருக்கிறது’ என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது உயிரிழந்தவர்களின் நினைவஞ்சலிக் கூட்டம் வெள்ளிக்கிழமை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாடில் இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மாவை எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

‘அழிக்கப்பட்ட ஒர் இனத்தின் கண்களில் இன்று கண்ணீர் சிந்திக்கொண்டு இருக்க வெற்றியின் மமதையில் சிங்கள தேசம் எக்காளமிடுகிறது. நாங்கள் அழிக்கப்பட்ட இனம் அல்ல. அழிந்து போவதற்கு எமது விடுதலைக்காக இந்த முள்ளிவாய்கால் ஒர் ஆரம்பமே என்பதை சிங்கள தேசத்திற்கு சொல்லிவைக்க விரும்புகின்றேன்.

மனிதகுல வரலாற்றில் மிகப் பெரிய உயிரிழப்பு எம்மினத்தில் தான் நடைபெற்றிருக்கிறது. இந்த நாள் ஒவ்வொருவரின் இதயத்தில் தீபமாக சுடராக எரிகின்ற நாள். உலகத்தில் தமிழ் இனம் எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கெல்லாம் உணர்வு ரீதியாக ஒன்றித்து எம்தேசத்தில் அமைதியாகியவர்களை நினைக்கும் புனிதநாள்.

ஆயுதப் போராட்டத்தை அழித்துவிட்டோம் என எக்காளமிடும் சிங்களதேசம் இன்றைய நாளில் தங்கள் உறவுகளுக்காக உரிமையுடன் நினைவஞ்சலி செலுத்த முடியாத நெருக்குவாரங்களுக்குள் இருக்கின்றோம்

இந்த நாடு எவ்வளது தூரம் நாகரீகமானது என்பதை உலக நாடுகள் அறிந்து வைத்திருக்கின்றன. தனது நாட்டு மக்களை போரில் பயன்படுத்த முடியாத பேராயுதங்களைப் பயன்படுத்தி அழித்து இன்று வெற்றிக் கொண்டாட்டங்களை தென்பகுதியில் செய்துவருகின்றது. அதுவும் ஒரு மாதத்திற்கு வெற்றிக் கொண்டாட்டத்தை கொண்டாடவுள்ளது.

உணர்வு ரீதியாக துன்பத்தில் வீழ்ந்த மக்களின் கண்ணீரைத் துடைக்காமல் யுத்த வெற்றியைக் காட்டி எம்மை சிங்கள தேசம் பிரித்துவைக்க நினைக்கிறது. எமது தாயக மண்ணில் எங்களை நாங்கள் ஆள்கின்ற சுயாட்சி முறை எமக்கு வேண்டும்.

நாங்கள் வீட்டுக்குச் செல்ல எங்கள் வீடுகளையும் நிலங்களையும் விட்டு இராணுவம் வெளியேற வேண்டும். எங்கள் பிரதேசங்களை பௌத்த விகாரகைளைப் பரப்பி, இராணுவத்தை குவித்து தமிழர் தாயக பூமியை சிங்கள பிரதேசமாக்க அரசு முயல்கிறது.

இதற்கு எதிராக மக்கள் போராட்டம் எழ வேண்டியிருந்தால் அது எழுந்துதான் ஆகும். எமது உரிமையை வென்று எடுப்பதற்காக மக்களை ஒன்று திரட்டி அகிம்சை வழியில் போராட்டங்களை முன்னேடுப்போம்’ என்றார்.

Related Posts