Ad Widget

உறவினர்களை தேடித்தருமாறு தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் ஐ.சி.ஆர்.சி.க்கு கடிதம்

srilanka_red_cross-ICRCதமிழகத்தில் உள்ள புலம்பெயர் தழிழர்கள் தமது உறவினர்களை தேடித் தருமாறு இருபதுக்கும் மேற்பட்ட கடிதங்களை, இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் (ஐ.சி.ஆர்.சி) யாழ். மாவட்ட காரியாலயத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் யாழ். மாவட்ட தலைவர் குணசேகரம்பிள்ளை பாலகிருஸ்ணன் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதிக்குள் தமது சங்கத்துக்கு 20 கடிதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அக்கடிதங்களில், காணாமல் போன தமது உறவினர்களை தேடித் தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அக்கடிதங்களின் பிரகாரம் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினால் சர்வதேசம் முழுவதிலும் உள்ள இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் காரியாலயங்களுக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றதாகவும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, இடப்பெயர்வு மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அடிப்படை வசதிகளை இலங்கை செஞ்சிலுவை சங்கம் முன்னெடுத்து வந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

1,224 மில்லியன் ரூபா செலவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 136 குடும்பங்களுக்கு சுமார் 90 ஆயிரம் ரூபா பெறுமதியில் மலசலகூடங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதுடன் அதே இடத்தில் உள்ள 14 பாடசாலைகளுக்கும் 14 மில்லியன் ரூபா செலவில் பாடசாலை மலசலகூடங்களும் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக மரநடுகை மற்றும் இந்திய வீட்டுத் திட்டங்கள், கலாசார விழுமியங்களை பாதுகாத்தல், அனர்த்த முகாமைத்துவம், எச்.ஐ.வி போன்றவற்றிற்கான விழிப்புணர்வு செயற்பாடுகளையும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் முன்னெடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, யாழ். மாவட்டத்தில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் அங்கத்தவர்கள் 10ஆயிரம் பேர் கடமையாற்றுவதாகவும் அனர்த்தங்களின் உதவுவதற்காக தொண்டர்கள் பணியாற்றுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Posts