Ad Widget

உரிமை போராட்டத்தின் போது சுமந்திரன் எங்கே?: விந்தன்

எமது மண்ணிலே புனிதமானதொரு போராட்டம் நடந்தது. அந்த போராட்ட களத்தில் கண்டிருக்கவே முடியாத முகங்களெல்லாம் இத்தனை அழிவுகளுக்குப் பிறகு, மழைக்கு பின்னர் வரும் புற்றீசல்கள் போல புறப்பட்டு வந்திருக்கிறார்கள்
என ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் தெரிவித்துள்ளார்.

vinthan-epdp

அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுமந்திரன் என்ற பெயரை முன்னர் எமக்கு தெரியாது. சரியோ தவறோ ஜீ.ஜீ. பொன்னம்பலத்தை அறிந்திருக்கின்றோம். தந்தை செல்வாவை அறிந்திருக்கின்றோம். அமிர்தலிங்கத்தை அறிந்திருக்கின்றோம். நீலன் திருச்செல்வத்தை அறிந்திருக்கின்றோம். ஆனால் சுமந்திரன் என்ற மனிதனை கடைத்தெருவில் கூட யாரும் காணவில்லை.

அகிம்சை போராட்ட காலத்திலும் காணவில்லை, ஆயூதப்போராட்ட காலத்திலும் காணவில்லை. எமது மக்கள் அம்புதரித்த மான் போல் அலைந்து கொண்டிந்தபோதும் காணவில்லை.

ஆயிரக்கணக்கான எமது இளைஞர்கள் எமது ஆயுத போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டார்கள் அப்போதெல்லாம் எத்தனையோ சட்டத்தரணிகள் அவர்களுக்காக வாதாடி அவர்களை விடுவிக்க வந்தார்கள்.

அப்போது கூட சட்டத்தரணியான சுமந்திரன் எமது போராளிகளை சிறை மீட்க வந்திருக்கவில்லை. கறுப்புச்சட்டை அணிந்துகொண்டு கறுவாக்காட்டில் குடியிருந்தவர். அடுத்தவன் வரவழைத்த அமைதியில் புகுந்து பின்கதவால் நாடாளுமன்றத்துக்கு வந்திருக்கின்றார்.

சிங்களம், தமிழருக்கு தீர்வு வழங்காது என்று கூறும் சுமந்திரன் அதே சிங்களத்துடன் திரை மறைவில் கிரிக்கட் விளையாட்டு நடத்துகிறார். சிங்களத்தோடு பின்கதவால் அவர் உறவு கொண்டால் அது தேசிய நல்லிணக்கம். அப்பாவி தமிழர்கள் உறவு கொண்டால் அது இனத்துரோகம்.

காந்தீயம் என்றும் சாத்வீகம் என்றும் வாய்ச்சவடால் விட்டுக்கொண்டிருக்கும் சுமந்திரன் இன்று யாருடன் கூட்டுச்சேர்ந்திருக்கின்றார்? இப்போ சாத்வீகம் பேசும் சாத்தான் மாவை சேனாதிராஜா தமிழ் தேசிய இராணுவத்தின் தளபதியாக இருக்க விரும்பியதை சுமந்திரன் மறுப்பாரா?.

சித்திரவதை முகாம்களுக்கு பொறுப்பாக இருந்தவர்களின் சேற்றுக்குள் தான் சுமந்திரன் இன்று சேர்ந்திருக்கிறார். ஆள் கடத்தல், கப்பம், படுகொலைகளுக்கு பெயர்போன சாத்தான்களின் சகதிக்குள்தான் சுமந்திரனும் சேர்ந்திருக்கின்றார் இதை சுமந்திரன் மறுப்பாரா? இப்போது சாத்வீகம் பற்றி தமிழ் மக்களுக்கு உபதேசம் செய்துகொண்டிருக்கிறார் சுமந்திரன்.

எமது உரிமை போராட்டத்தின்போது ஒரு கல்லை கூட தூக்கி எறிந்திராத சுமந்திரன் தனக்கு சொந்தமான கறுவாக்காட்டில் குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருந்தவர். தமிழ் மக்களின் உரிமை பற்றி பேசுவதற்கு இவருக்கு என்ன தகுதி நிலை இருக்கின்றது என்றும் விந்தன் கூறியூள்ளார்.

Related Posts