Ad Widget

உயிர்களை துன்புறுத்துமாறு மதங்கள் சொல்லவில்லை : வட மாகாண முதலமைச்சர்

“சிலர் தாம் சார்ந்த மதத்தின் மீது கொண்டிருக்கக்கூடிய அதீத பற்றுக் காரணமாகவோ அல்லது ஏனைய மதங்கள் பற்றிய போதிய அறிவு இன்மையாலோ ஏனைய மதங்களைச் சார்ந்த மக்களுடன் சண்டை சச்சரவுகளில் ஈடுபடுகின்றார்கள். இது வருத்தத்திற்குரியது” என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மானிப்பாய், ஸ்ரீ சத்ய சாயி பாடசாலையில் இடம்பெற்ற, “மதங்களுக்குள் ஒற்றுமையை உருவாக்கும் இலட்சியத்தை நோக்கிய சர்வ மத விழா – 2017” எனும் நிழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது, அவர் இதனைக் கூறினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“இன்று நீங்கள் மதங்களுக்குள் ஒற்றுமையை உருவாக்கும் இலட்சியத்துடன் கூடிய ஒரு சர்வ மத விழாவை ஒழுங்கு செய்திருப்பது காலத்தின் கட்டாயமானதும், மனதிற்கு மகிழ்வைத் தருகின்றதுமான ஒரு நிகழ்வாகும். சாயிநாதரின் பெயரில் விளங்கும் இப்பாடசாலை சர்வமத ஐக்கியத்தை நோக்கி நகர்வது சாலச் சிறந்த கைங்கரியமாகும். சர்வமத ஐக்கியத்தை வலியுறுத்தியவர் சாயிநாதர்.

இலங்கை சர்வமத சம்மேளனம் 1960 களில் தோன்றியபோது அதன் பிரதிச் செயலாளராக நான் கடமையாற்றினேன். 1970ம் ஆண்டின் 13ம் இலக்கச் சட்டமான சர்வமத சம்மேளனச் சட்டத்தில் ஆரம்ப அங்கத்தவர்களாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் 40 பேரில் இன்னமும் உயிருடன் இருக்கும் ஒரே நபர் நான் தான் என்று நினைக்கின்றேன். சர்வமதங்களும் சேர்ந்து என்னை உருவாக்கியுள்ளது. மதங்களின் கருப்பொருளை அறிய முற்பட்டால் அங்கு பாரிய ஒரு ஒற்றுமை இருப்பதை உணரலாம்.

மதங்கள் அனைத்தும் மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்கும் ஏனைய உயிரினங்கள் மீது அன்பும், பரிவும் காட்டுவதற்கும் அனைத்து உயிரினங்களையும் மதிக்கவும் அவற்றைப் பாதுகாப்பதற்கும் காப்பதற்குமே தோற்றுவிக்கப்பட்டன. ஒவ்வொரு மதமும் எங்கெங்கு தோற்றுவிக்கப்பட்டதோ அந்தந்த இடங்களில் வாழ்ந்த மக்களின் பண்பாட்டு கலாசாரங்களை அடியொற்றியதாகவும், அவர்களை நல்வழிப்படுத்தக்கூடிய வகையிலுமே தோற்றுவிக்கப்பட்டன.

உதாரணமாக இந்து சமயம் இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்டதால் இந்து சமயத்தில் கூறப்படுகின்ற சமய அனுட்டானங்கள் இந்திய மக்களுக்கு ஏற்றதாக அமைக்கப்பட்டன. அதே போன்று பிற சமயங்களும் எந்தெந்த நாடுகளில் தோன்றினவோ அந்தந்த நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த வணக்க முறைகள், சமூகப் பழக்க வழக்கங்கள் கலாசாரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகவே அமைந்தன. எல்லா மதங்களும் மக்களை நல்வழிப்படுத்துகின்ற வழிகாட்டிகளாகவே பொது நோக்குடையதாகவே அமைந்திருந்தன.

உலகில் காணப்படுகின்ற பல்வேறு மதங்களில் எந்தவொரு மதத்திலாவது மற்ற உயிரினங்களை துன்புறுத்துங்கள் அல்லது ஏனைய மக்களுக்கு உபத்திரவத்தை அளிக்கக்கூடியவர்களாக வாழுங்கள் என்று போதித்ததாக நாம் அறியவில்லை.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் அன்பு, ஜீவ காருண்யம், ஒழுக்கம் ஆகியவற்றை வெளிக்கொண்டு வரவும் அவற்றின் அடிப்படையில் மக்களை வாழச் செய்யவுமே மதங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

ஒவ்வொரு மதமும் மக்களை இறைவனுடன் இணைக்கின்ற ஒரு உறவுப் பாலமாகவே விளங்குகின்றது. பௌத்தம் இறைவனைப் பெயர் சுட்டிக் குறிப்பிடாதுவிடினும் முக்தி நிலையான நிர்வாண நிலை பற்றி பேசுகின்றது.

மதங்களுள் அடிப்படையில் பல ஒற்றுமைகள் இருந்தாலும் நடைமுறையில் வேற்றுமைகள் இருக்கின்றன. ஆனால் நாங்கள் யாவரும் ஒன்றை மட்டும் கவனமாக மனதில் வைத்திருக்க வேண்டும். புத்தர், பௌத்த மதத்தைச் சார்ந்திருக்கவில்லை. யேசு கிறிஸ்து, கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்திருக்கவில்லை. முகமது நபி பிரான், இஸ்லாமிய மதத்தைச் சார்ந்திருக்கவில்லை. இந்த மதங்கள் யாவுமே அவர்களின் காலத்தின் பின்னர் அவர்களின் பக்தர்களால் நிறுவப்பட்டன.

எம்முள் சிலர் தாம் சார்ந்த மதத்தின் மீது கொண்டிருக்கக்கூடிய அதீத பற்றுக் காரணமாகவோ அல்லது ஏனைய மதங்கள் பற்றிய போதிய அறிவு இன்மையாலோ ஏனைய மதங்களைச் சார்ந்த மக்களுடன் சண்டை சச்சரவுகளில் ஈடுபடுகின்றார்கள். இது வருத்தத்திற்குரியது.

மனிதம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. நாம் யாவரும் பிறக்கும் போது மனிதர்களே. எமது மொழி, மதம், கலாசாரம் ஆகியன அதன் பின்னர் எமக்குப் புகட்டப்பட்டனவற்றைச் சார்ந்தவையே ஒளிய எம்மைச் சார்ந்தவை அல்ல. அடிப்படையில் நாங்கள் யாவரும் மனிதர்களே. புகட்டப்பட்டவை எம்மைப் புகுந்த வழியில் பயணிக்கச் செய்கின்றன. வரையறுக்கப்பட்ட சிந்தனையுடையவர்களாக நாம் வாழ்ந்து பழக்கப்பட்டு விட்டோம்.

எம்மை எல்லாம் உலகப் புகழ்பெற்ற தத்துவஞானி ஜிட்டு கிருஷணமூர்த்தி ‘conditioned beings’ என்று அழைத்தார். எமது சமய அறிவால் வரையறுக்கப்பட்டவர்கள் என்றார். சமயங்களுக்கும் சமய அறிவுரைகளுக்கும் அப்பாற்பட்டதே மனிதம் என்பது. எந்தவித சார்புமற்று எளிய மனிதனால் எவர்மீதும் அன்பு செலுத்த முடியும்.

ஒரு குழந்தை எவ்வாறு கள்ளங் கபடமற்ற முறையில் எவரையும் பார்த்துச் சிரிக்கின்றதோ அவ்வாறான ஒரு நிலையே சார்பற்ற மனிதனின் நிலை. இந்தக் கள்ளம் கபடமற்ற நிலையை இயேசு கிறிஸ்து நாதரின் வாழ்க்கையில் கண்டார்கள். Christlike demeanour என்றால் இயேசு போன்ற கள்ளம் கபடமற்ற முகபாவம் என்று பொருள்படும்.

அவ்வாறான முகபாவம் ஏற்பட நாம் எந்தக் கட்டுப்பாட்டுக்கும் உள்ளடங்காதவர்களாக இருக்க வேண்டும். மதமான பேய் எம்மைப் பீடித்து விட்டால் நாம் அந்த முகபாவத்தை இழந்து விடுவோம். அதனால்த்தான்

இன்றைய வாழ்க்கை இயந்திரமயமாக்கப்பட்டு விட்டது. இயற்கையில் இருந்து ஒதுக்கப்பட்டு விட்டோம். இயந்திரமயமாக்கப்பட்ட நகர வாழ்வில் இருந்து சற்று விடுபட்டு கிராமச் சூழ்நிலைக்கு நாம் நகருகின்ற போது பல மாற்றங்களை எம்மால் அவதானிக்க முடிகின்றது. கிராமங்களில் பல்வேறு மதத்தவர்களும் தம்முள் ஐக்கியத்துடன் வாழ்கின்றார்கள். அவர்களின் மனங்கள் மிகத் தூய்மையானவை. மனித மனங்களை நன்கு உணர்ந்தவர்களாக ஏனையவர்களின் மனதைப் புண்படுத்தக்கூடாது என்ற உயரிய சிந்தனை கொண்டு வாழ்கின்றார்கள். நகர்ப்புறத்தில் இவ்வாறான உறவுகளை காண்பது கடினம்.

அவர்களுக்கான நேரமின்மையே அயலவர்களுடனான உறவுகளை பேண முடியாமைக்கான பிரதான காரணமாகும். தற்போது பக்கத்தில் உள்ளவர்களுடனும் அலைபேசியில் கதைக்கின்றார்கள்.

முன்னைய காலங்களில் மக்கள் குறைந்த பொருளீட்டத்தில் நிறைவான வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தார்கள். போதுமான அளவு ஓய்வு நேரங்கள் அவர்களுக்கிருந்தன. அதனால், அவர்கள் வாழ்க்கை பற்றியும் வாழும் முறைமை பற்றியும் அவர்கள் அறிய போதிய அவகாசம் இருந்தது.

பொறுமையாக இருந்து சமய ஆராய்வில் உட்புக இன்று எமது மக்களுக்கு நேரம் இல்லை. விளைவு மத நம்பிக்கையற்ற வன்மக் குணம் பொருந்திய ஒரு சமூகத்தை நாம் உருவாக்கி வருகின்றோம். இந் நிலைமை மாற வேண்டுமாயின் எம்முள் புரிந்துணர்வு மேலோங்க இது போன்ற சர்வமத ஒற்றுமையை வலியுறுத்தக்கூடிய நிகழ்வுகள் நகரங்கள், கிராமங்கள் தோறும் முன்னெடுக்கப்படுவது சாலச் சிறந்ததே.

இளைஞர், யுவதிகளையும் சிறு பிள்ளைகளையும் இவற்றில் ஈடுபடுத்த வேண்டும். இனிமேலாவது சர்வமத இணக்கப்பாட்டைக் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்க நாம் அனைவரும் இணைந்து கொண்டு பாடுபடுவோம்” என்றார்.

Related Posts