Ad Widget

உயிருக்கு உத்தரவாதம்; விடுவிப்புக்கு பின்னடிப்பு! – உண்ணாவிரதக் கைதிகள் விடயத்தில் அமைச்சர் சுவாமிநாதன்

உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை தான் ஏற்பார் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நாடாளுமன்றில் உறுதியளித்தார்.

இருப்பினும், இந்தக் கைதிகளை விடுவிப்பதா இல்லையா என்பது குறித்து தன்னால் எந்த முடிவையும் எடுக்கமுடியாது என்றும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற காணாமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றியபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிதரன் எம்.பி. குறுக்கிட்டு எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் சுவாமிநாதன் தனது உரையில், “கைதிகள் உண்ணாவிரதமிருந்து வருகின்றனர். இவர்களுள் ஒருவர் விடுதலைசெய்யப்பட்டுள்ளார். 5 பேர் மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏனைய 5 பேர் தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது. இவர்கள் தொடர்பில் எதிர்வரும் 11ஆம் திகதிக்கு முன்னர் முடிவெடுக்கப்படும்” என்றார்.

இதன்போது குறுக்கிட்ட சிறிதரன் எம்.பி.,

“உண்ணாவிரதமிருப்பது 11 பேர் அல்ல, 14 பேர். அவர்கள் தொடர்பில் 11ஆம் திகதி இறுதி முடிவு எடுக்கப்படும் என்கிறீர்கள். அதற்குள் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது?” என்று கேட்டார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் சுவாமிநாதன்,

“இல்லை. அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாது என்பதே எனது கருத்து” என்றார்.

“ஒருவேளை உயிராபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை நீங்கள் ஏற்பீர்களா?” என்று சிறிதரன் எம்.பி. மீண்டும் கேட்டார்.

“ஆம். உயிராபத்து எதுவும் ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை நான் ஏற்பேன்” என்றார்.

Related Posts