Ad Widget

உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட ஆலய விக்கிரகங்கள் திருட்டு

அண்மையில் உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட தையிட்டி கணையவில் பிள்ளையார் ஆலயத்திலிருந்த சாமி விக்கிரகங்கள் சில நாட்களில் காணமற்போயுள்ளன.

sooran

மேலும் சுவாமி வாகனங்கள் , மணிகள் பெறுமதியான பொழிகற்கள் என்பனவையும் ஆலயத்திலிருந்து திருடப்பட்டுள்ளன. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1990 ஆம் ஆண்டு வலி.வடக்கில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் கடந்த 1998 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் ஒரேயொருநாள் தையிட்டி -கணையவில் பிள்ளையார் ஆலயத்தை பார்வையிடுவதற்கு ஆலய நிர்வாகத்தினர் மற்றும் அவ்வூர் மக்களுக்கு அனுமதியளித்தனர். அப்போது ஆலயத்தில் சாமிவிக்கிரகங்கள், வாகனங்கள் பெறுமதிவாய்ந்த கற்கள் உள்ளிட்ட சொத்துக்கள் அங்கே இருந்ததாக அவ்வூர் மக்கள் தெரிவித்தனர்.

ஆனால் அண்மையில் தையிட்டி பகுதி விடுவிக்கப்பட்ட நிலையில் அங்கு சென்ற மக்கள் இக்கோயிலில் இருந்த சாமி விக்கிரகங்கள் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்கள் காணாமல் போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

எனினும் சில சாமி விக்கிரகங்கள் ஆலயத்தில் எஞ்சியிருந்ததைக் கண்டு அவர்கள் சற்று ஆறுதல் அடைந்தனர். அத்துடன் தலையில்லாத சூரன் சுவாமி வெளிவீதி வரும் காரம்பசு வாகனம் அங்கு இருந்ததாகவும் அவர்கள் கூறினர்.

ஆனால் மறுநாள் சென்று பார்த்த போது அவையும் முற்றுமுழுதாக அங்கிருந்து திருடிச் செல்லப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். ஆலயக் கருவறை இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்டு தனியே பொழிய கற்களால் முற்றுமுழுதாக நிர்மாணிக்கப்பட்டிருந்தது. நிர்மாணப் பணிகள் முடிய எஞ்சிய பொழிகற்களும் ஆலயத்திற்குள்ளேயே வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கற்கள் கூட அங்கிருந்து ஏற்றிச் செல்லப்பட்டுள்ளன.

இப்பகுதி இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு சில நாட்களில் இரவோடு இரவாக ஆலய விக்கிரகங்கள் ஏற்றிச் செல்லப்பட்டுள்ள நிலையில். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள பெறுமதியான பொருட்களும் திருடப்படுமா என்ற அச்ச நிலையில் அப்பகுதி மக்கள் உள்ளனர். இதற்கு பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related Posts