உயர்தர பரீட்சைகள் இன்று ஆரம்பம் பரீட்சாத்திகளுக்கு விசேட வழிகாட்டல் ஆலோசனைகள்!!

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் இன்று திங்கட்கிழமை (10) ஆரம்பமாகி, டிசம்பர் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. 340 525 பேர் பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் 2362 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (9) பரீட்சை திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பாடசாலை பரீட்சார்த்திகள் 2,46,521 பேரும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 94,004 பேருமாக மொத்தம் 3,41,525 பேர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். நாடு முழுவதும் 2,362 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைகள் நடத்தப்படவுள்ளன. பரீட்சைக்கு முன்னர் பரீட்சார்த்திகள் தங்கள் அனுமதி அட்டைகளைப் பெற்றிருப்பார்கள். பெறாதவர்கள், பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

அனுமதி அட்டையில் உங்கள் பெயர், பாடம் குறியீடுகள் மற்றும் பரீட்சைக்கு தோற்றவுள்ள மொழி ஆகியவை சரியாக உள்ளதா என கவனமாகச் சரிபார்க்கவும். ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், தாமதமின்றி திணைக்களத்தைத் தொடர்புகொள்ளவும். பரீட்சை நடைபெறும் இரவில், உங்கள் அனுமதி அட்டை, அடையாள அட்டை, பேனாக்கள், பென்சில்கள் மற்றும் ஆடைகள் உட்பட அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.

பரீட்சை நாளில் பரீட்சார்த்திகள் பரீட்சை ஆரம்பிப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பரீட்சை மத்திய நிலையத்தை அடைய வேண்டும். காலைப் பரீட்சைகள் காலை 8:30 மணிக்கு ஆரம்பமாகும். மாலைப் பரீட்சை பிற்பகல் 1 மணிக்கும், வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 2 மணிக்கும் ஆரம்பிக்கும்.

அனுமதி அட்டையைச் சான்றளிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட அதே கையொப்பத்தைத்தான் பரீட்சை மண்டபத்தில் விடைத்தாள்களிலும் பயன்படுத்த வேண்டும். கையொப்பங்கள் மாறுபட்டால் பெறுபேறுகள் வெளியிடுவதில் சிக்கல்கள் ஏற்படலாம்.

கையடக்கத் தொலைபேசிகள், இலத்திரனியல் கடிகாரங்கள் உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்கள் பரீட்சை மண்டபத்தினுள் கொண்டு வரத் தடை என்பதில் நினைவில் கொள்ளவும். சாதாரண கைக்கடிகாரம் மாத்திரம் அனுமதிக்கப்படும்.

பரீட்சை முழுவதிலும் பரீட்சார்த்தியின் முகம் மற்றும் காதுகள் மறைக்கப்படாமல் தெளிவாகத் தெரியக்கூடியவாறு இருக்க வேண்டும். பரீட்சை வினாத்தாளை வாசிப்பதற்கும், எந்தக் கேள்விகளுக்குப் பதிலளிப்பது என்று திட்டமிடுவதற்கும் மேலதிகமாக 10 நிமிடங்கள் வழங்கப்படும். இந்த நேரத்தை உரியவாறு பயன்படுத்தவும்.

ஒரு கேள்விக்கு அதிக நேரம் செலவிட வேண்டாம். இது தேவையான கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் போகச் செய்து, உங்களுக்கு நேரப் பற்றாக்குறையை ஏற்படுத்தும். வினாவில் கேட்கப்பட்டதற்கு மட்டும் பதிலளிக்கவும். உங்களுக்குத் தெரிந்த அனைத்துக் கருத்துக்களையும் உள்ளிட்டுப் பெரிய அளவில் பதில்களை எழுதினாலும், அவை புள்ளியீட்டுத் திட்டத்தின்படி மதிப்பிடப்பட்டு, தேவையான புள்ளிகளை மாத்திரமே பெறும்.

கட்டமைப்பு ரீதியான அல்லது சுருக்கமான கேள்விகளுக்கு, விடைத்தாளில் ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே பதிலளிக்க வேண்டும். பல்தேர்வு வினாக்களுக்கான விடைகளை, வினாத்தாளில் கேள்வியைச் செய்யும்போது உடனடியாக விடைத்தாளில் குறியிட வேண்டும். தாமதித்தால் விடை குறியிடும் நேரம் போதாமல் போகலாம்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டில் குறைந்த அழுத்தமான சூழலை உருவாக்கித் தர வேண்டும். அத்துடன், பரீட்சைத் திகதிகள் மற்றும் பாடங்களை உறுதிப்படுத்த, கால அட்டவணையை வீட்டில் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். பிள்ளைகளுக்கு வழக்கமாக உட்கொள்ளும் உணவையே கொடுக்கவும். புதிய அல்லது விசேட உணவு வகைகளை வழங்குவது பரீட்சை நேரத்தில் உடல்நலக்குறைவை ஏற்படுத்தலாம்.

பரீட்சைக் காலத்தில் பரீட்சை நிலையங்களுக்கு அருகில் சத்தமாக ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துதல் அல்லது விழாக்களை நடத்துவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது. பரீட்சை மோசடிகள் அதாவது தவறான தகவல்களைப் பரப்புதல், வினாத்தாள் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுதல் தொடர்பில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதேவேளை பரீட்சைக் காலத்தில் ஏதேனும் அவசர நிலைகளைக் கையாளும் பொருட்டு விசேட நிகழ்ச்சித் திட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திடீர் அனர்த்தங்கள் குறித்த தகவல்களை 117 என்ற இலக்கத்தின் ஊடாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு அறிவிக்கலாம். அல்லது பரீட்சைத் திணைக்களத்தை நேரடியாக 1911 என்ற இலக்கத்தின் ஊடாகத் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர செயற்பாட்டு மையத்தில் அமைந்துள்ள தேசிய பரீட்சை அவசர செயல்பாட்டுப் பிரிவு இலக்கங்களான 0113 668 026 அல்லது 0113 668 032 ஊடாக மேலதிக உதவிகளைப் பெறத் தொடர்புகொள்ளலாம் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts