Ad Widget

உதவிக்காக விசேட தேவையுடையோர் விண்ணப்பிப்பது குறைவு – இமெல்டா சுகுமார்

emalda_gaயாழ். மாவட்டத்திலுள்ள விசேட தேவையுடையோர் தங்களுக்கான உதவிகளை பெற்றுக்கொள்வதற்காக சமூக சேவை அமைச்சுக்கு அனுப்பும் விண்ணப்பங்கள் குறைவாக உள்ளதாக சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

விசேட தேவையுடையோருக்கான தேவைகள் தொடர்பான செயலமர்வு யாழ். மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

‘யாழ். மாவட்டத்திலுள்ள விசேட தேவையுடையோரின் தேவைகள் நிறைவேற்றப்படுவதில் தாமதங்கள் ஏற்படுகின்றன. இதற்கான காரணம் விசேட தேவையுடையோரின் விண்ணப்பங்கள் மிகக் குறைவாகவே சமூக சேவைகள் அமைச்சுக்கு கிடைப்பதாகும். இதனால், உதவிக்கான விண்ணப்பங்கள் கோருவதை உரிய முறையில் யாழ். மாவட்டத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

விசேட தேவையுடையோருக்கான உதவித் திட்டங்கள் சமூக சேவைகள் அமைச்சால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை பற்றி யாழ்ப்பாணத்தில் பலர் தெரியாமல் உள்ளனர்.

இதற்கான விழிப்புணர்வுகளை சமூக சேவைகள் அமைச்சின் உத்தியோகத்தர்கள் மேற்கொள்ள வேண்டும். உதவிக்கான விண்ணப்பங்கள் கோருவது தொடர்பான தகவல்களை உரிய முறையில் விசேட தேவையுடையோருக்கு உத்தியோகத்தர்கள் வழங்க வேண்டும்’ என்றார்.

இங்கு மாவட்டச் செயலர் உரையாற்றுகையில்,

‘சமூக சேவைகள் அமைச்சால் வழங்கப்படும் உதவித் திட்டங்களை வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்கள் எவ்வாறு பெற்றுக்கொள்ளலாமென்று அறிவுறுத்தப்பட வேண்டும். மேலும், யாழ். மாவட்டத்திலுள்ள விசேட தேவையுடையவர்கள் இது தொடர்பான சரியான தகவல்களை பெற்றுக்கொள்வதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன என நினைக்கின்றேன்.

சமூக சேவைகள் அமைச்சால் விசேட தேவையுடையோருக்கான இலவச வீட்டுத்திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. இதனால், இவர்களுக்கான வேலைத்திட்டங்கள் விரிவுபடுத்தப்படுகின்றது’ என்றார்.

மேற்படி செயலமர்வு கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட மாவட்டங்களிலும் நடைபெற்றது.

Related Posts