Ad Widget

உதவிகள் நடைமுறைப்படுத்துவதில் நடுநிலைமை வேண்டும்: ஐரோப்பிய தூதுவர்

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படுகின்ற உதவிகள் மற்றும் செயற்றிட்டங்கள் நடுநிலைமையுடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ஜரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டேவிட் டெலி தெரிவித்துள்ளார்.

DSC_0086 copy

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகளுக்கு வருமாறு ஜரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் தனக்கு அழைப்பு விடுத்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான புதிய தூதுவர் டேவிட் டெலிக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு நல்லூர் கோவில் வீதியிலுள்ள முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஐரோப்பியத் தூதுவர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

‘ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான புதிய தூதுவராக எனது கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் முதல்த் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்ததையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படுகின்ற உதவிகள் மற்றும் செயற்றிட்டங்களை நடுநிலைமையுடன் நடைமுறைப்படுத்தவே விரும்புகின்றோம்.

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையுடன் சிறந்த ஒரு நட்புறவைப் பேணுவதோடு, ஏற்றுமதிப் பங்காளாகவும் செயற்பட்டு வருகின்றது. இலங்கைக்கு பல மில்லியன் ரூபா பெறுமதியான உதவிகளை நாங்கள் வழங்குகின்றதுடன், இந்த உதவிகள் 2025ஆம் ஆண்டு வரை பயன்படுத்த முடியும்.

மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 20 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கும் திட்டத்தில் இதுவரையில் 16 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மீதி 4 ஆயிரம் வீடுகளும் நிர்மாணிப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

வடமாகாண முதலமைச்சரைச் சந்தித்து கலந்துரையாடியபோது, இங்குள்ள நிலைமைகள் குறித்து தெளிவாகவும் சுருக்கமாகவும் அவர் எனக்குத் தெரியப்படுத்தியுள்ளார். மேலும், நீண்டகாலத்திற்குப் பின்னர் வடமாகாணசபைத் தேர்தல் நடைபெற்று முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பதையும் குறிப்பிட்டார்’ என்றார்.

இதேவேளை, இந்த சந்திப்பைத் தொடர்ந்து முதலமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில்,

‘ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவரை இன்று சந்தித்துப் பேசியிருக்கின்றேன். இந்த நாட்டில் அவர்கள் மேற்கொள்ளும் செயற்றிட்டங்கள் குறித்து எனக்கு விளக்கியுள்ளார்கள். 20 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இவற்றில் 16 ஆயிரம் வீடுகள் இதுவரை கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

நன்மைகளை எங்களுக்குச் செய்து வருவது எங்களுக்கு நன்மையளிப்பதுடன், மகிழ்சியையும் தருகின்றது. இதனைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொண்டேன் .

இந்த நாட்டில் சமாதானம் நிலைப்பதற்கு அவர்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று எடுத்துக்கூறியுள்ளேன். ஏனென்றால் அவர்கள் அரசாங்கத்துடன் நெருக்கமான உறவைப் பேணிவருவதினால், எங்கள் நிலைப்பாடுகளை அறிந்து எங்களிடம் ஐக்கியத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு தகுதியை அவர்கள் பெற்றிருக்கின்றார்கள்.

என்னை ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகளுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். ஜரோப்பிய ஒன்றியத்தின் நல்லெண்ணம் எங்களிற்கு மகிழ்வையும் ஏற்றத்தையும் தருகின்றது. வருங்காலத்தில் அவர்களுடன் சேர்ந்து நல்லதொரு உறவைப் பேணிக்காக்க முடியும் என்றதொரு நம்பிக்கையும் உற்சாகமும் எனக்கிருக்கின்றது’ என்றார்.

Related Posts