Ad Widget

“உதயன்” பத்திரிகை தொடர்ச்சியாக பிழையான மற்றும் பொய்யான செய்திகளையே வெளியிட்ட வண்ணம் உள்ளது – அங்கஜன் இராமநாதன்

சுய அரசியல் இலாபத்திற்காக குடாநாட்டு மக்களை பிழையாக வழிநடத்த எத்தனிக்கும் “உதயன்” பத்திரிகை தொடர்ச்சியாக பிழையான மற்றும் பொய்யான செய்திகளையே வெளியிட்ட வண்ணம் உள்ளது. ஊரடங்கு அமுலில் இருந்த போதும் இப்பத்திரிகை அச்சடித்து பத்திரிகைகளை வெளியிட்டு விநியோகித்து வந்தது. இதன் மூலம், அரசாங்கம் ஊரடங்கு சட்டம் நடைமுறைகளை முழுமையாக புறந்தள்ளி செயற்பட்டுள்ளதோடு, கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் முன்னெடுத்துள்ள சுகாதார நடைமுறைகள் யாவற்றையும் புறந்தள்ளி இப்பத்திரிகை செயற்பட முனைகின்றமை அம்பலமாகியுள்ளது.

அதனைத்தொடர்ந்தும் இப்பத்திரிகை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிவாரணப்பணிகள் தொடர்பிலும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டிருந்தது. மக்களை சரியான பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய பத்திரிகை ஒன்று மக்களைக் குழப்பும் வகையில் செய்தியை வெளியிட்டதுடன், தனது சுய அரசியல் இலாபத்துக்காக எதிரணி அரசியல்வாதி மீது சேறு பூசும் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. நெருப்பை விட வேகமாக பரவுவது செய்தி, அதைவிட அதிவேகமாக பரவக்கூடியது தவறான செய்தி. ஊரடங்குச் சட்டம் நீக்கம் பற்றி அரசாங்கம் அறிவிக்காத நிலையில் பகுதி பகுதியாக ஊரடங்குச் சட்டம் நீக்கப்படும் என்ற செய்தியை பெரிய எழுத்தில் வெளியிட்டது. அதனைப் பார்த்த மக்கள் பொருட்களை வாங்க முண்டியடித்தார்கள். மக்களைக் குழப்பும் தலைப்புகளுடன் பொறுப்பற்ற செய்திகளை வெளியிடுவது கண்டிக்கப்பட வேண்டியது. அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதான நினைப்பை மக்களிடையே கொண்டு சென்றதும் இதே ஊடகம்தான்.

நாட்டில், நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ளநிலையில், இப்பத்திரிகை தமது நிறுவன உரிமையாளரின் அரசியல் நலனை முன்னிறுத்தி செயற்பட எத்தனிப்பதோடு, கொரோனா தொற்றை தடுக்க எடுத்த முயற்சிகளால் அரசாங்கம் மீது தமிழ் மக்களிடம் ஏற்பட்டுள்ள நல்லெண்ணத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்பட எத்தனிக்கின்றது.

தனிப்பட்ட முறையில் என் மீதுள்ள காழ்ப்புணர்சியில் என்னைப்பற்றி தவறான செய்திகளை பிரசுரித்து வரும் வேளையில் தனது ஊடக தர்மத்தை மறந்து உரிமையாளரான அரசியல்வாதியின் சொந்த நலனுக்காக இடர்காலத்தில் திறம்பட செயற்படும் அரசினையும், அரசாங்க அதிகாரிகளின் செயற்பாடுகளையும் கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறது. இது “உதயன்” பத்திரிகையினதும், அதன் உரிமையாளரைனதும் குறுகிய மனபாங்கையே எடுத்துக்காட்டுகிறது. கொரனாவுற்கு தீர்வு எனக்கூறிய ஆராதனை கூட்டம் பற்றிய விளம்பரமாக இருக்கட்டும், யாழில் ஊரடங்கு தளர்வு என செய்தி வெளியிட்ட விடயமாக இருக்கட்டும் ”உதயன்” பத்திரிகையின் சமூகபொறுப்பற்ற தன்மையினையே காட்டுகிறது. சொந்த அரசியல் இலாபத்திற்காக ஒரு இனத்தின் இருப்பையே அடகு வைக்கும் “உதயன்” போன்ற பத்திரிகையிடம் உண்மை தன்மையை எதிர்பார்க்க முடியாது.

இப்பத்திரிகையின் இத்தகைய சமூகபொறுப்பற்ற செயல்களுக்காக பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது கடும் கண்டனத்தையும் வெளியிட்டிருந்தார்.

இருப்பினும் ஆதரபூர்வமற்ற விதத்தில் என் மீது தொடுக்கப்பட்ட தனிமனித தாக்குதலை சரியான சான்றுகளுடன் மறுக்க முடியும், அதேவேளை “உதயன்” பத்திரிகையின் பொய் செய்திகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ளவும் தயாராகிவருகிறேன்.

இரட்ணஜீவன் கூல் ஐயா அவர்கள் நேற்று நாடாத்தியிருந்த ஊடகவியளாலர் சந்திப்பில் எனது பெயரை குறிப்பிட்டு சுமத்தியிருந்த குற்றச்சாட்டுக்களை முழுமையாக மறுக்கிறேன். எந்தவித ஆதாரமும் இல்லாமல் நியாயமில்லாத குற்றச்சாட்டுக்களை என் மீது சுமத்திருக்கிறார். தேர்தல் ஆணையக்கத்தில் சுயாதீன உறுப்பினராக அங்கம் வகிக்கும் ஐயா ஒரு நடுநிலமைவாதி போல் பேசாது, குறித்த ஒரு கட்சியின் உறுப்பினர் போல் செய்தியாளர் சந்திப்பை நடாத்தியது வருத்தமளிக்கிறது. தேர்தல் ஆணைக்குழுவில் ஒரு சுயாதீன உறுப்பினாரக இருப்பவர் தனது தனிப்பட்ட கருத்தினை தன்னிச்சையாக சொல்ல முடியாது. அவ் அங்கத்தவரின் கருத்து என்னவாயினும் அதனை தேர்த்தல் ஆணைக்குழுவிற்கே முறைப்பாடாக தெரிவிக்கவேண்டும். ஆணைக்குழு அக்கருத்தினை ஆராய்ந்த பின்னர் ஆணையாளர்தான் இறுதி முடிவை அறிவிக்க வேண்டும் என்கிற அடிப்படை விதிமுறை கூட ஐயாவிற்கு தெரிந்திருக்கவில்லை என்பது கவலைக்குரிய விடயம்.

நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பே என்னை குற்றம் சொல்லுவதற்காகவே ஏற்பாடு செய்யப்பட்டதொன்று போலிருந்தது. சுயாதீனமாக ஊடகவியளாலரைக் கூட்டி இவர் என் மீது வீண் பழி சுமத்தியதற்கு ஏதாவது ஆதாரம் இவரிடம் இருக்கிறதா? அவரைச் சந்தித்த ஊடவியளார்கள் எவரும் அக்குற்றச்சாட்டிற்கான ஆதாரங்களை பற்றி எந்த கேள்வியும் கேட்காதது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. ஆதாரம் இல்லாமல் யாரும் யார்மீது வேண்டுமானாலும் என்ன பழியும் சுமத்தலாமா? எந்த விதமான ஆதரங்களும் இல்லாமல் நியாயமற்ற முறையில் ஒரு குற்றத்தை சுமத்துவது என்பது, சமூகபொறுப்புள்ள பதவியில் இருக்கும் இவர் போன்றவர்கள், மக்களை ஒரு பிழையான பாதைக்கு இட்டுச்செல்வதாகவே அமையும்.

கடந்த அரசு அமைவதில் இவரின் வகிபாகம் என்ன என்பதும் யாருடைய செல்வாக்கினால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குள் வந்தார் என்பதும் அனைவரும் அறிந்ததே. தன்னை இந்த பதவியில் அமர்த்திய அந்த கட்சிக்கு தனது நன்றியை தெரிவிப்பதற்காக இவர் அந்த கட்சியை சேர்ந்த ஒரு அரசியல்வாதியை கண்டிப்பது போல் விளம்பரப்படுத்தியது வெளிபடையாகவே சகலருக்கும் புரிந்தது.

அரசாங்கம் செய்யும் எந்தவொரு நிவாரணப் பணியையும் நான் என்னுடையதாக இதுவரை உரிமை கொண்டாடியதும் இல்லை, இனியும் கொண்டாட போவதில்லை. என்னுடைய தனிப்பட்ட நிதிப்பங்களிப்பின் ஊடாகவே பல நிவாரண பணிகளைச் செய்து கொண்டிருக்கின்றேன். இந்த நிவாரணங்கள் நேர்தியாகவும், வினைத்திறனுடனும் அமைய “அங்கஜன் இளைஞர் அணி” என்னுடன் தோள் கொடுத்து நின்றதனை மறக்கவோ, மறுக்கவோ முடியாது. அந்த நிவாரண நிகழ்வுகளே என் சார்ந்த உறவுகளின் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன. அரசியல் இலாபங்களைக் கடந்து மக்கள் இடர்படும் வேளைகளில் அவர்களின் துயர் துடைப்பவனே மக்கள் பிரதிநிதி. இடர்படும் காலத்தில் மக்களிடம் இருந்து விலத்தி நின்று வேடிக்கை பார்பவர்கள் மக்களுக்கான நல்ல பிரதிநிதியாக இருக்க முடியாது என்கிற அடிப்படை கூட இவருக்கு புரியவில்லை என்பது எனக்கு ஆச்சரியமளிக்கிறது.

தேர்தல் ஆணைக்குழுவில் ஒரு சுயாதீன உறுப்பினராக அங்கம் வகிக்கும் இவரால் அந்த ஆணைக்குழுவின் விதிமுறைகளுக்கு ஒழுக முடியாமல் இருப்பதாலோ என்னவோ, இவர் சொல்வதை போன்று தேர்தல்கள் ஆணைக்குழுவும் இவது கருத்தை பொருட்படுத்தாமல் இறுதி தீர்மானம் மேற்கொள்கிறார்கள் போலும்.

இன்றைய ஊடகவியளார் சந்திப்பில் தான் வகிக்கும் பதவிக்கு சற்றும் பொருந்தாமல் ஒரு கட்சி சார்பாக பேசுபவர் போல் பேசியிருக்கும் இவர் இந்த பதவியின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியமை குறிப்பிடத்தக்கது. இப்படியாக ஒரு பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு பொறுப்பற்றதனமாக பேசுவதிலும் பார்க்க, அப்பதவியை துறந்து தேர்தலைச் சந்திக்க தயாரானால் இருகரம் கூப்பி வரவேற்று அவரை களத்தில் சந்திக்கவும் தயாரகவுள்ளேன்.

நன்றி

அங்கஜன் இராமநாதன்

Related Posts