Ad Widget

உதயனுடன் சமரசத்திற்கு இடமில்லை – நீதிமன்றில் அமைச்சர் தேவானந்தா.

daklausதனதும் தனது கட்சி மீதும் களங்கம் ஏற்படுத்தும் முகமாக உதயன் பத்திரிகையினால் பிரசுரிக்கப்பட்ட அவதூறுச்செய்திக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தொடுத்த ஆயிரம் (1,000) கோடி ரூபா கோரும் மானநஷ்ட வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நேற்று காலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.ஆனந்தராஜா அவர்கள் முன்பாக தனது சிரேஷ்ட வழக்கறிஞர் அப்துல் நஜீம் சட்டத்தரணி டி.ரெங்கன் அவர்களின் அனுசரணையுடன் முன்னிலையானார். உதயன் பத்திரிகை நிறுவனத்தின் சார்பில் அதன் ஆசிரியர் பிரேமானந்த் தனது வழக்கறிஞர் ஊடாக தோன்றியதுடன் இவ்வழக்கினை சமரசத்திற்கு கொண்டுவர அமைச்சர் அவர்களின் விருப்பம் குறித்து மாவட்ட நீதிபதியினால் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உதயன் பத்திரிகையானது தன்மீதும் தனது கட்சிமீதும் களங்கம் ஏற்படுத்தும் முகமாக தொடர்ச்சியாக விஷமத்தனமான ஆதாரமற்ற பொய்ச்செய்திகள் பிரசுரிக்கப்படுகின்றன. இதுதொடர்பாக இதனைப்போல பல அவதூறு செய்திகளுக்காக வழக்குத் தொடர உள்ளேன். முதலில் உதயன் பத்திரிகை நிறுவனத்தினர் எனதும் எனது கட்சிமீதும் மேற்கொள்ளப்பட்ட களங்கம் கற்பிக்கும் அவதூறு செய்திகளுக்காக நீதிமன்றின் முன் தோன்றி தமது தரப்பு நியாயத்தை தெரிவிக்க வேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்ளுகின்றேன். அதன் பின்னர் சமரசம் குறித்து என்னால் சிந்திக்க முடியும் எனவும் கூறினார்.

அமைச்சர் சார்பாக நீதிமன்றில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி மேற்படி உதயன் பத்திரிகையானது தான் வெளியிடும் செய்திகள் ஊடாக தனது கட்சிக்காரரான கௌரவ அமைச்சர் அவர்களது அரசியல் வாழ்விற்கும் அவரது பெயருக்கும் மிகப்பாரதூரமான முறையில் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் இதற்கு நீதித்துறை ஊடாக உரிய நிவாரணங்களைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதனைக் கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதிபதி ஏ.ஆனந்தராஜா அவர்கள் இவ்வழக்கினை எதிர்வரும் மார்ச் மாதம் 15ம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன் அன்று விசாரணை தொடரும் என அறிவித்தார்.

வழக்கின் முடிவில் நீதிமன்ற முன்றலில் திரண்டிருந்த ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் அவர்கள் தன்மீதும் தன் கட்சிமீதும் உதயன் பத்திரிகை ஊடாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் விஷமத்தனமான அவதூறான செய்திகளுக்கெதிராகவே தான் நீதித்துறையினை நாடியுள்ளதாக தெரிவித்தார். சட்டவிதிகளுக்கு அமைவாக குறிப்பிட்ட செய்திகள் தொடர்பாக தம்மால் அனுப்பப்பட்ட கோரிக்கைக் கடிதங்களைப் புறக்கணித்ததன் காரணமாகவே தான் ஜனநாயக ரீதியில் நீமன்றத்தை நாடியுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு கருத்து வெளியிட்டார்.

தொடர்புடைய செய்தி

உதயன் ஊடகத்திற்கு எதிராக 1000 கோடி ரூபா நஷ்டஈடு கோரி அமைச்சர் டக்ளஸ் நீதிமன்றில் ஆஜர்

Related Posts