Ad Widget

உண்மையைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்டுவோம்! ஐ.நா. பொதுச் சபை மாநாட்டில் ஜனாதிபதி

இலங்கையில் மனித உரிமைகளை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உண்மையைக் கண்டறிதல், நீதியை நிலைநாட்டுதல் ஆகியன மூலமாக கடந்த கால பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 70ஆவது மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நிலையான அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் ஆகிய இரண்டு பிரதான நோக்கங்களின் அடிப்படையில் தாம் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலம் தொடர்பில் நேர்மையாக நடந்து கொள்ளுதல் மற்றும் நவீன இலங்கையைக் கட்டியெழுப்புதல் ஆகிய இரண்டு அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் நோக்கங்களை அடைந்து கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மிக நீண்ட காலமாக ஐக்கிய நாடுகள் அமைப்பில் இலங்கை அங்கத்துவம் வகிப்பதாகவும், அமர்வுகளில் பங்கேற்று உரையாற்றக் கிடைத்ததனை பெருமிதமாகவும், கௌரவமாகவும் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரகடனங்கள் கொள்கைகள் மற்றும் சர்வதேச பிரகடனங்களை முழு அளவில் ஏற்றுக்கொள்ளும் நாடுகளின் வரிசையில் இலங்கையும் உள்ளடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளர்.

மனித உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்துவதே ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதான பணியாக அமைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மனித உரிமை பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்கு இலங்கை உரிய முக்கியத்துவம் அளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசு ஜனநாயகத்தை நிலைநாட்டவும் கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி நாட்டை அபிவிருத்தி செய்யவும் முனைப்புடன் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை போர் காரணமாக பாரிய அழிவுகளை சந்தித்த நாடு எனவும், இதனால் சமூகத்திற்கும் நாட்டுக்கும் பாரிய அழிவுகள் ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அனைத்து விதமான போர்கள் மற்றும் பயங்கரவாதம் என்பன மனிதாபிமானத்திற்கு இழிவானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“எவ்வாறான அடிப்படை காரணிகள் இருந்தாலும் மனிதாபிமானத்திற்கு எதிரான கொடூரங்கள் கண்டிக்கப்பட வேண்டியவை.

பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதில் இலங்கை வெற்றியீட்டியுள்ளது. உலகின் மிகவும் கொடூரமான பயங்கரவாத இயக்கம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

போரின் பின்னரான அனுபவங்களும் மிகவும் முக்கியமானது.

பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட ஏனைய அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுடன் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளத் தயாராகவுள்ளோம்.

பௌத்த கொள்கைகளுக்கு அமைய கற்றுக்கொண்டவற்றின் ஊடாக மூன்று வகையிலான மனித மோதல்கள் காணப்படுகின்றன.

முதலாவது மோதல் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலானது. நவீன மனிதன் தனது நலனுக்காக அதிகளவில் இயற்கையை அழித்து வருகின்றான்.

இரண்டாவது மோதல் மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலானது. தனிப்பட்ட நபர்கள், சமூகங்கள், நாடுகளுக்கு இடையில் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. சட்டம் ஒழுங்கினால் உரிய முறையில் மனித உரிமைகள் பேணப்படாத சந்தர்ப்பத்திலேயே மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் மோதல் இடம்பெறுகின்றது.

மூன்றாவது போராட்டம் மனிதனுக்கு உள்ளேயே உருவாகும் மோதலாகும். மேற்குறிப்பிட்ட இரண்டு மோதல்களும் ஏற்படுவதற்கான பிரதான ஏதுவாக மூன்றாவதனைக் குறிப்பிட முடியும். அதாவது மனிதன் மனிதத்தை இழக்கும் காரணத்தினால் எல்லா வகையிலான மோதல்களும் இடம்பெற்று வருகின்றன” – என்று கூறியுள்ளார்.

Related Posts