Ad Widget

உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளின் வழக்கில் அரசியல் தலையீடு இல்லை! : சுமந்திரன்

தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் வழக்கு விசாரணை வவுனியாவிலிருந்து அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டமைக்கான காரணம் அந்த வழக்கின் சாட்சியாளர்களே தவிர அரசியல் தலையீடு அல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று (26) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் ஒருவரால் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இந்த வழக்கின் பிரதான சாட்சியாளர்களாக இருப்பவர்கள், முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களான தமிழர்கள். தாங்கள் சாட்சியம் வழங்கும் போது தமிழ் பிரதேசங்களுக்கு சென்று சாட்சியம் வழங்க மாட்டோம் என்று அவர்கள் கூறியுள்ளார்கள்.

சிங்கள பிரதேசங்களில் உள்ள நீதிமன்றத்தில் சாட்சியம் வழங்க தயார் என்று கூறியிருக்கின்றார்கள். அதனால் தான் இந்த அரசியல் கைதிகளுக்கு எதிரான வழக்கு அநுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்று கூறினார்.

ஆகவே அந்த சாட்சியாளர்கள் தமிழ் பிரதேசத்திற்கு வந்து சாட்சியமளிப்பதற்கு பயமிருந்தால், அவர்களுக்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தான் சட்ட மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இது தொடர்பில் அந்த சாட்சியாளர்களுடன் பேசுவதற்கு சட்ட மா அதிபர் இணங்கியுள்ளதாகவும் எம். ஏ. சுமந்திரன் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் அரசாங்கம் வழங்கும் பாதுகாப்பை எற்றுக் கொண்டு அந்த சாட்சியாளர்கள் வவுனியா நீதிமன்றத்திற்கு வரத் தயாராக இருந்தால் அந்த வழக்குகளை வவுனியா நீதிமன்றத்திற்கு மாற்ற தயார் என்று சட்ட மா அதிபர் கூறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் கூறியுள்ளார்.

Related Posts