Ad Widget

உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது ஏன்? விளக்குகிறது தூயநீருக்கான மக்கள் ஒன்றியம்

கோரிக்கை தொடர்பாக எம்மால் அணுகப்பட்ட முத்தரப்பினரதும் சாதகமான கூற்றுக்களைக் கருத்திற் கொண்டு எதிர்காலத்தில் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட்டு இப்பிரச்சினையில் உறுதியான தீர்வைத் தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் எமது போராட்டத்தை புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நிறுத்திக் கொண்டோம்.

water pro-chunnakam

இவ்வாறு தூய நீருக்கான மக்கள் ஒன்றியம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

07.04.2015 செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு நல்லூர் ஆலய முன்றிலில் ஆரம்பமாகிய பேரணியின் போது முதலமைச்சர், ஆளுநர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோரிடம் வலிகாமம் குடிநீர்ப் பிரச்சினை தொடர்பான ஒன்பது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டது.

தொடர்ந்து இக்கோரிக்கைகள் நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்தக் கோரி விதைக் குழுமம் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை உள்ளடக்கிய எட்டுப் பேரால் நீர் மற்றும் ஆகாரம் ஏதுமற்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இப் போராட்டத்தைக் கருத்திற் கொண்டு வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர், கௌரவ அமைச்சர்கள் மற்றும் கௌரவ உறுப்பினர்கள் நேரடியாக ஸ்தலத்திற்கு விஜயம் செய்து பிரச்சினைகளை விரிவாகக் கேட்டறிந்து அவற்றில் பெரும் பகுதியான கோரிக்கைகளைத் தீர்ப்பதற்குரிய வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு உறுதியளித்திருந்தார்கள்.

எமது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு இப்பிரச்சினைக்கு விரைவானதும், உறுதியானதுமான தீர்வினை வழங்குவதற்கு உறுதியளித்த முதலமைச்சர், ஆளுநர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும் இவ்விடயத்தைப் பொறுப்புடன் கையாண்ட கௌரவ அமைச்சர் பா.டெனீஸ்வரன் உட்பட ஏனைய கௌரவ மாகாண அமைச்சர்கள், கௌரவ மாகாண மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், கல்விமான்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள் ஆகியோருக்கு எமது நன்றிகளைத் தெரிவிப்பதுடன் இந்தப் போராட்டம் வெற்றியடையத் தோள் கொடுத்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் உயர் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள், பொது அமைப்புக்கள், பொதுமக்கள் ஆகியோருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் – என்றுள்ளது.

Related Posts