Ad Widget

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் இருக்கும் உறவுகளின் உடல்நிலை கவலைக்கிடம்

தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் யுத்தத்தின் போதும் அதற்கு பின்னரும் கைது செய்யப்பட்டும் சரணடைந்த நிலையிலும், காணாமல் போகச் செய்யப்பட்ட தமது உறவுகளை தேடிக் கண்டறியும் குடும்பங்களை சேர்ந்தோர் இன்று மூன்றாவது நாளாக உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா ஏ9 வீதியிலுள்ள தபாலகத்திற்கு முன்பாக தொடர் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல்போன உறவினர்களில் பலரின் உடல் நிலை மோசமாக உள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

வவுனியாவில் காணாமல்போன உறவுகளினால் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டம் கடும் மழை, குளிருக்கு மத்தியிலும் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

வவுனியா தபால் நிலையத்திற்கு அருகில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் 14 பேர் சாகும் வரையிலான தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பகல் வேளைகளில் பலர் சென்று காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு ஆதரவாக இருந்த போதும், இரவு வேளைகளில் அவர்கள் இயலாத நிலையிலும் தனிமையில் கழிக்க வேண்டியுள்ளது.

கடும் மழை, கடும் குளிர் என்பவற்றுக்கு மத்தியில் இரவுப் பொழுதை அவர்கள் தனிமையில் கழித்து வருகின்ற நிலையில், சிலரது உடல்நிலை பலவீனம் அடைந்து வருகின்றது.

தமக்கான உரிய பதிலை நல்லாட்சி அரசாங்கம் வழங்காத பட்சத்தில் தாம் இறப்பதற்கும் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இன்றைய தினம் வவுனியாவில் உள்ள இளைஞர்கள் இவர்களது உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, ஒன்றுகூடி அடுத்தகட்டம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, காணாமல் போனவர்களின் உறவுகளினால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை நேற்றைய தினம் கமராவுடன் சென்ற புலனாய்வு அதிகாரிகள் நிழற்படம் மற்றும் ஒளிப்பதிவு செய்துள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

தம்மை பல்வேறு தரப்பினர் நிழற்படம் மற்றும் ஒளிப்பதிவு செய்கின்ற போதிலும், எந்தவொரு அச்சுறுத்தலும் இதுவரை விடுக்கப்படவில்லை என உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.

மேலும் தமிழர் தாயகத்தில் ஸ்ரீலங்கா அரச படைகள் மற்றும் அரச துணை ஆயுதக்குழுக்களால் தமது உறவுகள் கடத்திச் செல்லப்பட்டமையை தாம் நேரடியாக கண்டதாக உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தம்மால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் அனைத்தும் நிபந்தனைகள் இன்றி நிறைவேற்றப்படும் வரை, சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் தொடரும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அத்தோடு, தாம் உயிர் இழந்தால் அதற்குரிய முழுப்பொறுப்பை ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோரே ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

விசேட பண்டிகை நாட்களில் சிறு குற்றங்களில் ஈடுபடும் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யும் அரசாங்கம், நீண்டகாலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை ஏன் விடுதலை செய்யவில்லை எனவும் கேள்வியெழுப்பிள்ளனர்.

Related Posts