Ad Widget

உக்ரைனின் முக்கிய நகரங்களின் மீது தொடர் தாக்குதல் நடத்திய ரஷ்யா: பல இடங்களில் குண்டு வெடிப்பு

உக்ரைன் – ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் உக்ரைனின் முக்கிய இரண்டு நகரங்களின் மீது ரஷ்யா வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளது.

உக்ரைன் தலைநகர் கிய்வ் நகர் மீது, நேற்றிரவு ரஷ்யா தாக்குதல் நடத்தியதையடுத்து அப்பகுதி மக்களை உடனடியாக வெளியேறுமாறு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

மேலும் மேற்கு நகரமான க்மேல்னிட்ஸ்கியில் உள்ள அதிகாரிகள், ரஷ்ய இராணுவம் இரவோடு இரவாக உக்ரைனின் இராணுவ தளவாடங்களை தாக்கி, ஐந்து விமானங்களை சேதப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை 11.00 மணி முதல் கிய்வ் நகரில், 10 இற்கும் மேற்பட்ட இடங்களில் குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக மேயர் விட்டலி கிளிட்ச்கோ கூறியுள்ளார்.

இதற்கமைய, 40 ஏவுகணைகள்” மற்றும் “சுமார் 35 ட்ரோன்கள்” ஏவப்பட்டதாகவும், அவற்றில் 37 ஏவுகணைகள் மற்றும் 29 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் உக்ரைனின் ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி வலேரி ஜலுஷ்னி நேற்று கூறியுள்ளார்.

மேலும் உக்ரைனுக்கு F-16 போர் விமானங்களை வழங்க அமெரிக்கா ஒப்புக்கொண்டதையடுத்து, மேற்கு நாடுகள் போரை ஊக்குவிப்பதாக ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், உக்ரைன் ரஷ்யாவிற்கு எதிராக தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதுடன், அதற்கு எதிர் தாக்குதலை மேற்கொள்ள உக்ரைன் தரப்பும் தயார் என அறிவித்துள்ளது.

Related Posts