Ad Widget

ஈழத் தமிழர்கள் 22 பேர் உதவி கோரி கதறல்

இந்தோனேஷியாவிலிருந்து, 22 இலங்கை அகதிகள் நாடுகடத்தப்பட உள்ளனர் என்று செய்தி வெளியானதையடுத்து, தாங்கள் நாடு கட்டத்தப்பட்டால், துன்புறுத்தப்படுவோம் என்ற அச்சத்தில் அவர்கள் உறைந்து போயுள்ளனர் என இந்தியச் செய்தி தெரிவிக்கின்றது.

இந்தோனேசிய கடலில் 2016ஆம் ஆண்டு தத்தளித்த இலங்கை தமிழ் அகதிகள் 44 பேர், பல்வேறு அழுத்தங்களுக்குப் பின்னர் அந்நாட்டில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் தமிழகத்திலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்ததாக கூறப்பட்டது. தற்பொழுது இந்தோனேசியாவில் உள்ள 44 பேர்களில், ஐந்து அகதிகளுக்கு அகதி அந்துஸ்து வழங்கப்பட்டுள்ளது. 17 அகதிகள் தமிழகத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள 22 அகதிகளும் நாடுகடத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்களுள் ஒருவர் சிவரஞ்சனி. இந்தோனேசியாவில் லோக்சுமேவ் என்ற அகதிகள் மையத்தில் வசித்து வருகிறார். அவர் கர்ப்பமாக இருந்த நிலையில், அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஆண்குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.

குழந்தை பிறந்த 3 நாட்களில் சிவரஞ்சனி, முகாமுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்டுள்ளார். இதனால் கோபமடைந்த அவரும், அவரது கணவர் பகிதரம் கந்தசாமியும் தங்கள் சூழ்நிலை குறித்து நியூசிலாந்து ஊடகம் ஒன்றிடம் பேட்டி அளித்துள்ளனர்.

அப்போது, கடந்த வருடம் ஜூன் மாதம் இந்தோனேஷிய கடலில் தத்தளித்த அவர்கள், நியூசிலாந்து செல்ல முயற்சித்தாகக் கூறியுள்ளனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்ததற்காக தாம் எட்டு ஆண்டுகள் இலங்கைச் சிறையில் இருந்ததாகவும், நகங்கள் பிடுங்கப்பட்டு, குற்றப்புலனாய்வு பிரிவினரால் (சி.ஐ.டி) தொடர்ந்து சித்திரவதைக்கு உள்ளதாகவும் தம்பதியினர் குறிப்பிட்டுள்ளனர்.

44 அகதிகளும் இந்திய மதிப்பில் தலா ஒன்றரை இலட்சம் ரூபாய் கொடுத்து, வேதாரண்யத்திலிருந்து படகில் வந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். நியூசிலாந்தில் கரை சேர்ப்பதாகச் சொன்ன ஆட்கடத்தல்காரர்கள், எரிபொருள் தீர்ந்ததும் வேறு படகில் தப்பிவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், தன்னால் உட்கார, நிற்கக்கூட முடியவில்லை எனக் கலங்கியுள்ளார் சிவரஞ்சனி. கௌரவமான வாழ்க்கையை எதிர்பார்த்துள்ள இந்த அகதிகள், இலங்கைக்கே மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டால் கடும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவோம் என அஞ்சுகின்றனர்.

Related Posts