Ad Widget

ஈழத்து எழுத்தாளரின் நூல்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை

booksஈழத்து எழுத்தாளர்கள், இலக்கிய கர்த்தாக்களை ஊக்குவிக்கும் முகமாக ஈழத்து எழுத்தாளர்களின் இலக்கிய கர்த்தாக்களின் நூல்களை கொள்வனவு செய்வதற்கு வேண்டிய நடவடிக்கைகளை இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

இது சம்பந்தமான சுற்றறிக்கை ஒன்றை இலங்கையிலுள்ள பிரதேச செயலகங்கள், உதவி அரச அதிபர் பிரிவுகளுக்கும் கலாசார அமைச்சு அனுப்பி வைத்துள்ளது.

கடந்த காலங்களில் கலாசார திணைக்களம் இத்தகைய எழுத்தாளர்களிடம் இருந்து நூல்களை கொள்வனவு செய்தது.

இந்த வேளையில் பல எழுத்தாளர்களுடைய நூல்கள் கொள்வனவு செய்யப்படக் கூடிய முறையில் தகவல்கள் கிடைக்கப் பெறாமையால் கொள்வனவு செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டதாகவும் இதனை நிவர்த்தி செய்யும் வகையில் தற்போது பிரதேச செயலாளர், உதவி அரசாங்க அதிபர் பிரிவு மட்டத்திலுள்ள எழுத்தாளர்களை இனம் கண்டு அவர்கள் மூலம் உரியவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்த நடவடிக்கை மேற் கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலர் மற்றும் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளிலுள்ள எழுத்தாளர்களை இனம் கண்டு அவர்கள் பிரசுரித்த நூல்களின் ஒரு பிரதியை குறிப்பிட்ட விண்ணப்பத்துடன் கலாசார திணைக்களத்துக்கு அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

எழுத்தாளர் ஒருவர் பல நூல்களை எழுதி இருந்தால் ஒவ்வொரு நூலுடனும் ஒவ்வொரு விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும். அனுப்பப்படும் நூல்கள் கொள்வனவு செய்யப்படும் ஆண்டிலோ அன்றி கடந்தஆண்டோ வெளியிடப்பட்டதாக இருக்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களையும் விண்ணப்பங்களையும் பிரதேச செயலகங்கள், உதவி அரச அதிபர் பிரிவுகளில் கடமையாற்றும் கலாசார அலுவலர்கள் மற்றும் கலாசார அபிவிருத்தி உதவியாளர்களுடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts