Ad Widget

ஈராக்: காரகோஷிலிருந்து கிறிஸ்தவர்கள் வெளியேறுகின்றனர்

ஈராக்கில் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் முக்கிய நகரமான காரகோஷை ஐஎஸ் இஸ்லாமியத் தீவிரவாதிகள் கைப்பற்றியதையடுத்து, கிறிஸ்தவர்கள் பெரும் எண்ணிக்கையில் அந்நகரிலிருந்து வெளியேறிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

gaza_nin_christ_get

நினேவே மாகாணத்தில் உள்ள காரகோஷ் நகரிலிருந்து குர்திஷ் படைகள் பின்வாங்கியதையடுத்து, ஒரே இரவில் ஐஎஸ் எனப்படும் “இஸ்லாமிய அரசு” குழுவினர் அந்நகரைக் கைப்பற்றினர்.

இதற்கிடையில், மவுண்ட் சின்ஜார் பகுதியில் ஐஎஸ் குழுவால் பிடித்துவைக்கப்பட்டிருந்த யாஸிதி என்ற சிறுபான்மை மதக்குழுவைச் சேர்ந்த 50,000க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுவிட்டதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

பாக்தாதிற்கு வடமேற்கில் 400 கி.மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் நினேவே மாகாணத்தில் பெரும் எண்ணிக்கையில் மதச் சிறுபான்மையினர் வசிக்கிறார்கள்.
ஜூன் மாதத்தில், வட பகுதியில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் தாக்குதலைத் தொடங்கியதையடுத்து, ஆயிரக்கணக்கானவர்கள் அங்கிருந்து வெளியேறும் கட்டாயத்திற்கு உள்ளானார்கள்.

நினேவேயில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் இரவோடு இரவாக வீடுகளை விட்டு வெளியேறிவிட்டதாக பாரிஸிலிருந்து செயல்படும் சர்வதேச கிறிஸ்தவ அமைப்பான “ஃப்ரெடெர்நைட் என் ஈராக்” தெரிவித்துள்ளது.

கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர், குர்திஷ்ஸ்தான் தன்னாட்சிப் பகுதியை நோக்கி சென்றிருப்பதாக நம்பப்படுகிறது.

பேஷ்மெர்கா என்று அழைக்கப்படும் குர்திஷ் படையினர் பல வாரங்களாக ஐஎஸ் குழுவினருடன் சண்டையிட்டு வருகின்றனர்.

புதன் கிழமையன்று இரவு, காரகோஷ் நகர ஆர்க்பிஷப்பிடம், தாங்கள் அந்த இடத்தைவிட்டுச் செல்லப்போவதாக பேஷ்மெர்கா காமாண்டர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஐஎஸ் தீவிரவாதிகள், தேவாலயங்களில் இருக்கும் சிலுவைகளை இறக்கிவருவதோடு, மத நூல்களை எரிப்பதாகவும் காரகோஷில் இருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஈராக்கின் கிறிஸ்தவத் தலைநகரம் என்று அழைக்கப்படும் இந்த நகரம், மோசூல் நகரின் தென் கிழக்கே 30 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. மோசூல் நகரம் ஜூன் மாதம் ஐஎஸ் குழுக்களால் கைப்பற்றப்பட்டது.

இஸ்லாத்திற்கு மாற வேண்டும் அல்லது மரணத்தைச் சந்திக்க வேண்டுமென இஸ்லாமிய தீவிரவாதிகள் கெடு விதித்ததையடுத்து போன மாதம் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவக் குடும்பங்கள் மோசூல் நகரை விட்டு வெளியேறினர்.

கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் மவுண்ட் சின்ஜரிலிருந்து மீட்கப்பட்ட யாஸிதிகளுக்கு உதவ, பொருட்களைத் திரட்டிக்கொண்டிருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

கடந்த வார இறுதியில் சின்ஜர் நகரை ஐஎஸ் கைப்பற்றிய பிறகு, இந்த மதக் குழுவினர் தஞ்சக் கோரிக்கைவிடுத்தனர்.

அந்த நகரிலிருந்து 2 லட்சம் பொதுமக்கள் இடம்பெயர்ந்திருப்பதாக மனிதநேய விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் ஐ.நா. அலுவலகம் தெரிவித்துள்ளது.

மலைப் பகுதியில் சிக்கியிருப்பவர்கள் தண்ணீரின்றி அவஸ்தைப்பட்டுவருகின்றனர். ஏற்கனவே 40 குழந்தைகள் இறந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

ஈராக்கில்தான் உலகின் மிகப் பழமையான கிறிஸ்தவ சமூகங்கள் வசிக்கின்றன. 2003ஆம் ஆண்டில் அமெரிக்கா தலைமையில் படையெடுப்பு நிகழ்ந்த பிறகு, வகுப்புவாத வன்முறை அதிகரித்ததோடு, அங்கே கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையும் குறைய ஆரம்பித்தது.

இஸ்லாமிய கலீபா அரசை உருவாக்கும் நோக்கத்தோடு ஐஎஸ் குழு ஈராக், சிரியா நாடுகளின் பெரும் பகுதியை பிடித்துள்ளது.

டைக்ரிஸ் நதியின் குறுக்கில் கட்டப்பட்டிருக்கும் வியூக முக்கியத்துவம் வாய்ந்த மோசுல் அணையைத் தாங்கள் கைப்பற்றிவிட்டதாக ஐஎஸ் குழு சொல்கிறது. ஆனால், குர்திஷ் படையினர் தாங்கள்தான் அந்தப் பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

நாட்டின் வடபகுதியில் இருக்கும் கிர்குக் நகரில் ஷியா முஸ்லிம்கள் வழிபடும் மசூதிக்கு அருகில் ஒரு கார் வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர்.

யாஸிதிகள் என்பது யார்?

இவர்களது இனமும் தோற்றமும் தொடர்ந்து விவாதத்திற்குரிய விஷயமாகவே இருக்கிறது.

ஜொராஸ்ட்ரிய மதம் உள்பட பல்வேறு மதத்தின் கூறுகளை இந்த மதம் உள்வாங்கியுள்ளது.

பல இஸ்லாமியக் குழுக்களும் பிற குழுக்களும் யாஸிதிகளை சாத்தான் வழிபாட்டாளர்களாக்க் கருதுகின்றனர்.

உலகம் முழுவதும் 5 லட்சம் யாஸிதிகள் வசிப்பதாக சொல்லப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் ஈராக்கின் நினேவே சமவெளியில் வசிக்கிறார்கள்.

Related Posts