Ad Widget

ஈமெயில், எஸ்.எம்.எஸ்.மூலம் பணமோசடி யாழில் அதிகம்; எச்சரிக்கிறார் மத்திய வங்கி அதிகாரி

மின்னஞ்சல் (ஈமெயில்) மூலமாகவும், குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) மூலமாகவும் பணம் மோசடி செய்யப்படும் சம்பவங்கள் யாழ்.மாவட்டத்தில் அதிகரித்து வருவதால் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கியின் வடபிராந்திய சிரேஷ்ட முகாமையாளர் பா.சிவதீபன் முன்னெச்சரிக்கை செய்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

யாழ்.மாவட்டத்தில் பல்வேறு வடிவங்களில் பணமோசடிகள் இடம்பெற்று வருகின்றன. தடை செய்யப்பட்ட “பிரமிட்’ திட்டங்கள் மூலம் பணமோசடிகள் இடம்பெற்று வந்தன. இது தற்போது ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தற்போது மின்னஞ்சல் (ஈமெயில்) மூலமாகவும் குறுந்தகவல் மூலமாகவும் (எஸ்.எம்.எஸ்.) பணமோசடிகள் இடம்பெற்று வருகின்றன. “உங்களுக்கு லொத்தரில் கோடிக் கணக்கான பணம் விழுந்துள்ளது’ என்று முதலில் ஒரு மின்னஞ்சல் அல்லது எஸ்.எம்.எஸ். இனந்தெரியாதவர்களிடம் இருந்து சிலருக்கு அனுப்பப்படுகின்றது.

சிறிது நேரத்தில் அந்தப் பணத்தை உங்களுக்கு அனுப்புவதற்கு வங்கிக் கணக்கு இலக்கத்தை தருமாறு கோரி மீண்டும் எஸ்.எம்.எஸ் அல்லது ஈமெயில் வருகிறது.

இதன் பின்பு குறித்த பணத்தை உங்கள் வங்கிக் கணக்குக்கு மத்திய வங்கியூடாக அனுப்புவதற்கு ஒருதொகைப் பணம் செலவாகின்றது. அதனை நாம் குறிப்பிடும் வங்கிக் கணக்கு இலக்கத்துக்கு அனுப்பி வையுங்கள் என்ற தகவல் வழங்கப்படுகிறது.

அதன் பின்னர் பணத்தை குறித்த வங்கிக் கணக்கு இலக்கத்தில் வைப்பிலிட்ட பின்னர் எதுவித தொடர்புகளும் இருக்காது. அந்தத் தொடர்புகள் அனைத்தும் பின்னர் நின்றுவிடும்.

இவ்வாறு யாழ்.மாவட்டத்தில் ஏமாற்றப்பட்டவர்கள் இலங்கை மத்திய வங்கியின் வடபிராந்திய கிளையில் முறைப்பாடுகளைச் செய்துள்ளனர். எனவே மேற்படி பணம் பறிக்கும் மோசடி கும்பல்கள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என்றார்.

Related Posts