தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் (ஈபீடிபீ) இடையே என்ன வித்தியாசம் காணப்படுகிறது. நாங்கள் ஈபீடிபீயை நிராகரிக்க வேண்டுமானால், கூட்டமைப்பையும் தூக்கி எறியவேண்டும் எனத் தெரிவித்தார் தமிழ் தேசிய முன்னணியின் யாழ். மாவட்ட வேட்பாளரும், சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன்.
யாழ். தென்மராட்சி – கோவிலாக்கண்டி பிரதேசத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
2010ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில், பயங்கரவாதத்தை அழித்தமைக்கு எமது மனமார்ந்த நன்றிகள் என மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்துத் தெரிவித்தவர் சம்பந்தன்.
இதைத்தானே ஈபீடிபீயும் செய்கிறது. ஈபீடிபீயும் விடுதலைப் போராட்டத்தை பங்கரவாதம், விடுதலைப் புலிகளை பங்கரவாதிகள் என்று சொல்லுகிறது.
ஈபீடிபீயும் சுதந்திர தினத்தில் கலந்து கொள்கிறது. ஈபீடிபீயும் சிங்களத் தலைவர்களுடன் சேர்ந்து சிங்களக் கொடியை அசைத்துக் கொண்டு திரிகிறது.
ஈபீடிபீயும் மாகாண சபையை ஏற்றுக்கொள்கிறது. ஈபீடிபீயும் அமைச்சரவையில் பங்கெடுக்கிறது.
அப்படியாயின் ஈபீடிபீக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்வியையும் இதன்போது எழுப்பினார்.