Ad Widget

இ.போ.சபையின் வடபிராந்திய ஊழியர்கள் ஒருமணிநேர பணிப்பகிஸ்கரிப்பு

இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய சாலையின் ஊழியர்கள் இன்று ஒருமணிநேர பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர்.

இன்று காலை 10 மணியிலிருந்து 11 மணிவரையே இ.போ.சபை ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர்.

மேலும் இது தொடர்பில் தெரிய வருவது,

யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பொதுமலசலகூடத்தில் இருந்து மலக்கழிவுகள் 15 நாட்களாக அகற்றப்படாமையினால் பொதுமலசலகூடம் பூட்டப்பட்டுள்ளதுடன் துர்நாற்றமும் வீசுகின்றது.இதனால் அதிகாலையில் தூர இடங்களில் இருந்து வரும் பிரயாணிகளும், இ.போ.சபை ஊழியர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே தங்களுக்கு தற்காலிக மலசலகூடம் ஒன்றினை ஏற்படுத்தித் தரவேண்டும் என்றும் இல்லாவிடில் உடனடியாக மலக்கழிவை அகற்றித்தருவதற்கு உரிய நடவடிக்கையினை யாழ்.மாநகர சபை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியே போராட்டத்தை மேற்கொண்டனர்.

அத்துடன் இன்றைய தினம் யாழ்.மாநகர சபை மலக்கழிவை அகற்றாவிடில் எமது பணிப்பகிஸ்கரிப்பு தீர்வு கிடைக்கும் வரை தொடரும் என்று இ.போ.சபை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கடந்த காலங்களில் கல்லுண்டாய் வெளியிலேயே மலக்கழிவுகள் கொட்டப்பட்டு வந்தது.எனினும் குறித்த பகுதி மக்களின் நியாயமான கோரிக்கையினை அடுத்து சுற்றுச்சூழல் அமைச்சும்,உள்ளுராட்சி அமைச்சும் இணைந்து குறித்த இடத்தில் மலக்கழிவை கொட்டுவதற்கு அனுமதிக்க முடியாது என யாழ்.மாநகர சபைக்கு அறிவித்துள்ளதுடன் மலக்கழிவை கொட்டுவதற்கு மாற்று இடம் ஒன்றினை தேடுமாறும் பணிக்கப்பட்டிருந்தது.

எனினும் அவ்வாறான மாற்று இடம் எதனையும் மாநகர சபை தேடிக்கொள்ளவில்லை.இதனாலேயே மலக்கழிவு அகற்றும் பணிகளையும்,மாநகர சபை நிறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts