Ad Widget

இவ்வாண்டேனும் புதிய அரசியலமைப்பு வர வேண்டும் : சம்பந்தன்

ஏவிளம்பி புத்தாண்டை முன்னிட்டு எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழ் மக்கள் தற்பொழுது அனுபவிக்கும் துன்பங்கள், ஏமாற்றங்கள், ஏக்கங்கள் மற்றும் ஒதுக்கல்களில் இருந்து மீண்டு அவர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாண்டில் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் புதிய அரசியலமைப்பானது புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வை வழங்கும் வகையில் அமையவேண்டுமெனவும் அவர் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைவாழ் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி, பல்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் எம் தமிழ் உறவுகளுக்கும் எங்களுடன் சேர்ந்து புத்தாண்டை அனுஷ்டிக்கும், எமது சிங்கள சகோதரர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மனம் மிக மகிழ்கின்றேன் என எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

புத்தாண்டு பிறக்கும்போது மக்கள் மனங்களில் எதிர்பார்ப்புக்கள் பல உண்டாவது இயல்பானதாகும் எனவும் அவ் எதிர்பார்ப்புக்களில் பிரதானமாக இவ்வாண்டில் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் புதிய அரசியலமைப்பானது புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வை வழங்கும் வகையில் அமையவேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.

அவ் அரசியலமைப்பு இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்துவதாக அமைந்திட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள இரா.சம்பந்தன், அது உண்மையான நல்லிணக்கத்திற்கு வழிகோலவேண்டுமெனவும் இப்புத்தாண்டு நன்னாளில் இறையருளை இறைஞ்சுவோம் என இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

அதுபோல தமிழ் மக்கள் தற்பொழுது அனுபவிக்கும் துன்பங்கள் ஏமாற்றங்கள், ஏக்கங்கள் மற்றும் ஒதுக்கல்களில் இருந்து மீண்டு அவர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் என்ற எமது கோரிக்கையையும் இவ்வேளையில் வெளிப்படுத்துகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நாட்டின் பெரும்பான்மை இனத்தவரான சிங்கள மக்களுக்கும் சிறுபான்மை இனத்தவரான தமிழ்மக்களுக்கும் பொதுவான புத்தாண்டாக சித்திரைப் புத்தாண்டு கொண்டாடப்படுவது மகிழ்ச்சிக்குரியதாகும் எனவும் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.

இப்புத்தாண்டை ஈரினத்தவர்களும் பொதுவாக மகிழ்வுடன் கொண்டாடுவது போன்று சகல விடயங்களையும் நல்லுறவுடன் கையாளும் சகஜநிலை இந்நாட்டில் தோன்றி இன நல்லிணக்கம் ஏற்பட இப்புத்தாண்டு வழிசமைக்கட்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த வகையில் இனங்களுக்கிடையில் ஒற்றுமை, நல்லுறவு, புரிந்துணர்வு ஏற்பட்டு சாந்தி, சமாதானம் மேலோங்கி இந்நாடு அமைதிப் பூங்காவாக மிளிர்ந்திட ஏவிளம்பி புத்தாண்டில் நல்லனவெல்லாம் நடந்தேறிட வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதுடன், அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts