இளைஞர் கும்பலின் வாள்வெட்டுக்கு இலக்காகி மாணவர்கள் இருவர் படுகாயம்!

மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் கும்பலின் வாள்வெட்டுக்கு இலக்காகி தெல்லிப்பழை யூனியன் கல்லூரி உயர்தர வகுப்பு மாணவர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சுன்னாகம் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொலிஸார் சுன்னாகம் சந்தியில் சுமார் ஐம்பது மீற்றர் தூரத்தில் கடமையில் ஈடுபட்டு இருக்கக் கூடியதாக மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒன்பது பேர் தமது தகப்பனாரின் கடைகளில் நின்ற பாடசாலை மாணவர்கள் இருவரையும் வெட்டி காயப்படுத்தியதுடன் கடைகளையும் உடைத்து சேதப்படுத்தி விட்டுச் சென்றுள்ளார்கள்.

சுன்னாகம் நகரப் பகுதியில் பஸ் நிலையப் பகுதியில் அமைந்துள்ள கடைகளில் நின்ற மாணவர்களான பங்களா லேன், மல்லாகத்தைச் சேர்ந்த கண்ணதாசன் கோகுலதாசன் (வயது 18), கும்பிளாவளைப் பிள்ளையார் கோயிலடி, அளவெட்டி மேற்கைச் சேர்ந்த பத்மசீலன் விதுசன்(வயது 18) ஆகியோரே இளைஞர் கும்பலின் வாள் வெட்டுக்கு உள்ளானார்கள்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள். இந்த சம்பவம் சுன்னாகம் நகரப் பகுதியில் உள்ள வர்த்தகர்களிடையே பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாக இத்தகைய சம்பவங்கள் குறைவைடைந்து காணப்பட்ட போதிலும் மீண்டும் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.

இத்தகைய குற்றச் செயலகள் சம்பந்தமாக விளக்கமறியலில் இருந்தவர்கள் சிலர் வெளியில் வந்துள்ள நிலையில் இத்தகைய சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன என்று பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Related Posts