Ad Widget

இலவச சூம்(zoom) வகுப்புக்களை குழப்பும் விசமிகள் – ஆசிரியர்கள் கவலை

மாணவர்களுக்கு இலவச கற்றல் செயற்பாடுகளை சூம் செயலி ஊடாக முன்னெடுக்கும் போது , போலி இணைப்புக்களில் ஊடுருவும் விசமிகள் கற்றல் செயற்பாடுகளை குழப்புவதாக ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கோரோனா பெருந்தொற்று காரணமாக நாடுமுழுவதும் பயண தடை அமுலில் உள்ளது. இதனால் மாண்வர்களின் கல்வி செயற்பாடுகளுக்கு பெரும் தடங்கல் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் சூம் செயலி ஊடாக கற்றல் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சில ஆசிரியர்கள் சூம் ஊடான கற்றல் செயற்பாடுகளுக்கு கட்டணம் அறவிட்டு , கட்டணம் செலுத்தியவர்களுக்கு இணைப்பு வழங்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வறிய மாணவர்கள் பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில் சில ஆசிரியர்கள் இலவசமாக மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகளை சூம் செயலி ஊடாக நடத்தி வருகின்றனர். தமது கற்பித்தலுக்கான இணைப்பினை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி அதன் ஊடாக கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அவ்வாறான ஆசிரியர்களின் இணைப்புக்களுக்கு போலி பெயர்களில் உள்நுழையும் விஷமிகள் , கற்றல் செயற்பாடுகளை குழப்பும் வகையில் சத்தம் எழுப்புதல் , ஆசிரியரை கேலி , கிண்டல் செய்தல் , ஆசிரியர்களுடன் சந்தேகம் எனும் பெயரில் முரண்பாடுகளை வளர்க்கும் முகமாக தர்க்கம் புரிதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு கற்றல் நடவடிக்கையை குழப்புகின்றனர்.

இதனால் மாணவர்களின் கற்றல் செயற்பாடு குழப்பமடைந்து வறிய மாணவர்கள் பலரும் பாதிக்கப்படுவதாக இலவசமாக கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Related Posts