Ad Widget

இலவச கண் பரிசோதனை

சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வசிக்கும் 55 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு இலவச கண் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதுடன், மூக்குக்கண்ணாடிகளும் வழங்கும் நடவடிக்கை வலி. தென்மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ளதாக சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி கே.ரஐீவ் இன்று தெரிவித்தார்.

அரசசார்பற்ற நிறுவனங்களின் அனுசரணையுடன் நடைபெறவுள்ள இந்த இலவச மருத்துவ முகாமில், வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள 150 முதியவர்களுக்கு மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், கண் சத்திரசிகிச்சை செய்யவேண்டிய தேவை ஏற்படுபவர்களுக்கு வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை செய்வதற்கான ஒழுங்குகள் செய்து கொடுக்கப்படும். இதேவேளை, கண் வில்லைகளும் இலவசமாக வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த இலவச மருத்துவ முகாமில் கலந்துகொள்ள விரும்புகின்றவர்கள் எதிர்வரும் 16ஆம் திகதிக்கு முன்பாக சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொதுச்சுகாதார பரிசோதகருடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் சுகாதாரத்துறையை சேர்ந்தவர்கள் பாடசாலைகளுக்கு வரும்போது மாணவர்களுடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை பாடசாலை நிர்வாகம் வழங்க வேண்டும். இதனால், மாணவர்கள் மத்தியில் சுகாதாரம் சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தமுடியும்.

நாட்டில் இளவயதுக் கர்ப்பம், சிறுவர் துஷ்பிரயோகம், சட்டவிரோத கருக்கலைப்பு என்பன நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இதனால், பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் பாடசாலை மாணவர்களாக இருக்கின்றனர். இது தொடர்பான விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதன் மூலம் இவற்றைக் கட்டுப்படுத்த முடியும்.

சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுகாதாரக் கழகங்களை உருவாக்கி சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது தொடர்பிலும் பருவமழை ஆரம்பமாகவுள்ள நிலையில், டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளமையால் அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன’ என்றார்.

Related Posts