Ad Widget

இலவசக் கல்வியை இல்லாதொழிக்க அரசு முனைப்புடன் செயற்படுகிறது யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

இந்த அரசு பொதுமக்களுக்குத் தெரியாமலேயே இலவசக் கல்வியை மாற்றி அமைக்கப் போகிறது. பல்கலைக்கழகக் கல்வி மட்டுமன்றி பாடசாலைக் கல்வியையும் பணம் கொடுத்தே பெற வேண்டிய நிலை இதன் மூலம் ஏற்படப் போகிறது. இதனைத் தடுத்து நிறுத்துவதை பிரதான மார்க்கமாகக் கொண்டு பல்கலைக்கழக ஆசிரியர்கள் தொடர் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
தமது பணிப்புறக்கணிப்புத் தொடர்பில் விளக்கம் அளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் நேற்று நடத்தியது. இதன்போது கருத்துத் தெரிவிக்கையில், அரசு மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்குவதன் ஊடாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் உள்ள பல்கலைக்கழக தரத்தை குறைத்து அவற்றின் செயற்பாட்டை முடக்க அரசு முயற்சிக்கிறது.

தனியார் பல்கலைக்கழகங்களை அமைப்பது தொடர்பில் பல்கலைக்கழக ஆசிரியர்களுடன் எதுவித கலந்துரையாடல்களை நடத்தவோ அபிப்பிராயங்களைக் கேட்கவோ அரசு முயற்சிக்க வில்லை.

மாணவர்களது திறமைகளைப் பரீட்சிப்பதற்குப் பதிலாக பணத்தைக் கொடுத்து பட்டம் பெற்று விடலாம் என்ற விபரீத நிலையை உருவாக்க முயற்சிக்கிறது. இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது வறிய மற்றும் கிராமப்புற மாணவர்களே.

இலவசக் கல்வியைப் பாதுகாத்து அதன் மூலமாக வருங்கால சந்ததியை அறிவியல் சமூகமாகத் தக்கவைக்கவே நாம் போராடுகின்றோம் என்று பல்கலைக்கழக ஆசிரிய சங்கம் தமது போராட்டம் தொடர்பில் விளக்கம் அளித்துள்ளது

Related Posts