Ad Widget

இலஞ்சம், ஊழல் சம்பவங்கள் முறைப்பாடளிக்க உத்தியோகபூர்வமாக இணையத்தளம்

நாட்டுமக்கள் தமக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய இலஞ்சம் மற்றும் ஊழலுடன் தொடர்புடைய அனுபவங்களை முறைப்பாடு வடிவில் பகிர்ந்துகொள்வதற்கும் அதுகுறித்து முன்னெடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் ஏற்றவகையில் ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பினால் வடிவமைக்கப்பட்டுள்ள ‘அப்பேசல்லி’ என்ற இணையப்பக்கம் சர்வதேச இலஞ்ச, ஊழல் ஒழிப்பு தினமான 9 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பினால் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வின்போது ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் சட்டத்தரணி நதீஷானி பெரேரா, பணிப்பாளர்சபையின் தலைவர் அனுஷிகா அமரசிங்க மற்றும் சங்கீதா குணரத்ன ஆகியோர் இணைந்து மேற்படி இணையப்பக்கத்தை அங்குரார்ப்பணம் செய்துவைத்தனர்.

கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியிலிருந்து ஒட்டுமொத்த உலகமும் மீள்வதற்குத் திணறிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆகியவை நாம் வாழும் சமூகத்தைப் பீடித்திருக்கின்ற மிகமுக்கிய நோயாகக் காணப்படுவதாக இதன்போது சுட்டிக்காட்டிய ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் நதீஷானி பெரேரா, உலகவங்கியினால் வெளியிடப்பட்ட தரவுகளின் பிரகாரம் உலகளாவிய ரீதியில் வருடாந்தம் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டொலர் நிதி இலஞ்சமாக வழங்கப்படுவதாகவும் உலக பொருளாதாரப் பேரவையின் தரவுகளின்படி உலகின் வருடாந்த மொத்தத்தேசிய உற்பத்தியில் 5 சதவீதமானவை ஊழல் மோசடிகளால் வீணடிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

நாடொன்றில் இலஞ்சம், ஊழல் என்பன காணப்படும்போது அந்நாட்டில் இடம்பெறும் அபிவிருத்தியின் பயனை மக்களால் அனுபவிக்கமுடியாத நிலையேற்படும். எமது நாடு பெருமளவான வளங்களைக் கொண்டிருக்கின்ற போதிலும் இன்னமும் அபிவிருத்தியடைந்த நாடாகவே இருப்பதற்கு இந்த ஊழல் மோசடிகளே பிரதான காரணமாகும். எனவே அரசியலிலும் அரசதுறை மற்றும் தனியார்துறையிலும் காணப்படும் ஊழல்களை முற்றாக இல்லாதொழிப்பதன் ஊடாகவே நாட்டை முன்நோக்கி நகர்த்திச்செல்லமுடியும் என்றும் நதீஷானி பெரேரா சுட்டிக்காட்டினார்.

மேற்படி நோக்கங்களுக்காகவே இந்தப் புதிய இணையப்பக்கம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அதனைப் பயன்படுத்தி பொதுமக்கள் தமக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய இலஞ்சம் மற்றும் ஊழலுடன் தொடர்புடைய சம்பவங்கள் பற்றி முறைப்பாடளிக்க முன்வரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அம்முறைப்பாடுகளை அடிப்படையாகக்கொண்டு சட்டநடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் தமது அமைப்பிற்கு இல்லாததன் காரணமாக அடுத்தகட்டமாக மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் முறைப்பாட்டாளருக்கு அவசியமான ஆலோசனைகள் தமது அமைப்பினால் வழங்கப்படும் என்றும் ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் தெரிவித்தார்.

அதன்படி www.apesalli.lk என்ற இணையப்பக்கத்திற்குள் பிரவேசிப்பதன் ஊடாக மக்கள் தமது முறைப்பாடுகளை கதை வடிவிலோ அல்லது அதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்குப் பதில் வழங்குவதன் ஊடாகவோ பதிவேற்றம் செய்யலாம். அதற்குரிய புகைப்படங்கள் அல்லது வேறு ஏதேனும் ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில் மக்கள் அவற்றையும் தமது முறைப்பாட்டுடன் இணைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts