Ad Widget

இலங்கை வருமாறு மூனுக்கு, ஜனாதிபதி அழைப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின், இலங்கைக்கான இறுதி விஜயத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள அபிவிருத்தியை மதிப்பிடுவதற்கு இலங்கைக்கு இன்னொருமுறை விஜயம் செய்யுமாறு அவருக்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார்.

ban-keen-moon

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐ.நா செயலாளர் நாயகத்துக்கும் இடையில் நியூயோர்க் நகரிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சனிக்கிழமை பிற்பகல் சந்திப்பொன்று இடம்பெற்றது.

ஜனாதிபதி ராஜபக்ஷவின் தலைமைத்துவத்திற்காக அவரைப் பாராட்டிய பான் கீ மூன், போரின் பின்னர் இலங்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்றங்களை ஏற்றுக்கொண்டதோடு, இவ்வாறான அரசியல் தலைமைத்துவத்தைக் கொண்டு எஞ்சியுள்ள சவால்களும் வெற்றிகொள்ளப்படும் என தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

ஏனைய அடைவுகளுக்கு மத்தியில், பூர்த்தியடையும் நிலையை எட்டியுள்ள கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைகள், சுகாதார சேவைகளின் முன்னேற்றம், முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வும், மீள் இணைப்பும் உள்ளடங்கலாக இடம்பெற்றுள்ள அபிவிருத்தி குறித்து ஜனாதிபதி ராஜபக்ஷ இதன்போது, மூனுக்கு விளக்கினார்.

போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசாங்கம் பொறுப்பெடுத்துள்ள பாடசாலைகளின் மறுசீரமைப்புத் தொடர்பாகவும் செயலாளர் நாயகத்திற்கு ஜனாதிபதி தகவலளித்தார்.

முன்னர் இருந்திருக்காதவாறு, தேசிய பரீட்சைகளில் நாட்டின் சிறந்த முடிவுகளில் சில தற்போது, வட மாகாணத்திலிருந்து வெளிவருவதாக ஜனாதிபதி ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

வெற்றிகரமான அரசியல் செயற்பாடுகளுக்கு விரிவான அரசியல் ஆலோசித்தலின் தேவையையும் செயலாளர் நாயகம் வலியுறுத்தினார். இது விடயத்தில், அனைத்து அரசியல் கட்சிகளும் கலந்துபேச வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

அவரது இறுதி விஜயத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள அபிவிருத்தியை மதிப்பிடுவதற்கு இலங்கைக்கு இன்னொருமுறை விஜயம் செய்யுமாறு பான் கீ மூனுக்கு ஜனாதிபதி ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார்.

வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்புப் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் த வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திருமதி ஷெனுகா செனவிரத்ன, ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி கலாநிதி. பாலித கோஹன, பிரதி நிரந்தரப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரும் இந்த சந்திப்பின் போது பிரசன்னமாகியிருந்தனர்.

Related Posts