Ad Widget

இலங்கை வருகின்றார் பான் கீ மூன்! மைத்திரி, ரணில், சம்பந்தனுடன் முக்கிய பேச்சு; மீள்குடியேறிய மக்களை யாழில் சந்திப்பார்!!

நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ – மூன் எதிர்வரும் 31ஆம் திகதி புதன்கிழமை இலங்கை வருகின்றார்.

இவர் இங்கு தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

அத்துடன், ஐ.நாவின் பூகோள அபிவிருத்தி அடைவுகள் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் அவர் உரையாற்றவுள்ளார்.

யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ – மூன், அங்கு இடம்பெயர்ந்து மீளக்குடியேற்றப்பட்ட மக்களை நேரில் சந்தித்தும் கலந்துரையாடுவார் என்று அவரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

அத்துடன், காலியில் நடக்கும் இளைஞர் நல்லிணக்க மாநாட்டிலும் பான் கீ – மூன் உரையாற்றவுள்ளார் என்று ஸ்டீபன் டுஜாரிக் கூறியுள்ளார்.

இலங்கை விஜயத்தின்போது, அமைதியை ஊக்குவித்தல் மற்றும் சமூகங்களிடையே அபிவிருத்தியை ஏற்படுத்துதல் தொடர்பான விடயங்களில் ஐ.நா. செயலாளர் நாயகம் கூடுதல் கவனம் செலுத்துவார் என்று அவரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் மேலும் தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இலங்கை அரசின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த மைத்திரி – ரணில் தலைமையிலான அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் பான் கீ – மூன் இந்த விஜயத்தின்போது தீவிரமாக ஆராய்வார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.நா. செயலாளர் நாயகம் பதவியில் இருந்து இந்த ஆண்டு இறுதியுடன் ஓய்வு பெறவுள்ள பான் கீ – மூன், எதிர்வரும் 31ஆம் திகதி இலங்கைக்கு இரண்டாவது தடவை பயணம் மேற்கொள்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts