Ad Widget

இலங்கை முஸ்லிம்களின் இனப்படுகொலை குறித்து உண்மை நிலை கண்டறியப்பட வேண்டும்

இலங்கையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்கள் மீது இன ரீதியாக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் தொடர்பாக உண்மை நிலை கண்டறியப்பட வேண்டும் என நல்லிணக்க பொறிமுறைகளுக்கான செயலணியிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க பொறிமுறைகளுக்கான செயலணியின் மக்கள் கருத்தறியும் அமர்வு முன்னிலையில் இந்த கோரிக்கை முஸ்லிம்கள் சார்ந்த சிவில் அமைப்புகளினால் முன் வைக்கப்பட்டுள்ளன.

நல்லிணக்க பொறிமுறைகளுக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இறுதி அமர்வு நேற்று (18) வியாழக்கிழமை பட்டிப்பளை பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த அமர்வின் போது கருத்தை முன் வைத்த சமூக நல்லிணக்கத்திற்கும் வலுவூட்டலுக்குமான அமைப்பின் இயக்குநரான எம். எஸ் .எம். நஸீர், ´´ வடக்கு – கிழக்கு மாகாணங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்திற்கு தொடர்ந்து தடைகள் காணப்படுவதால் அத் தடைகள் நீக்கப்பட வேண்டும்.

இன ரீதியாக முஸ்லிம்கள் மீதான படுகொலைகள் , வெளியேற்றம் போன்ற செயல்பாடுகள் தொடர்பாக தண்டனைக்கு அது தொடர்பான பக்கசார்பற்ற நீதி விசாரனை நடைபெற்று உண்மை நிலை கண்டறியப்பட வேண்டும் ” என கேட்டுக் கொண்டார்.

தற்போது உள் நாட்டில் பௌத்த கடும்போக்குடையவர்களின் செயல்பாடுகள், இனங்களிடையே, மதங்களிடையே நல்லிணக்கத்திற்கு தடையாக இருப்பது தொடர்பாகவும் கருத்து இங்கு முன் வைக்கப்பட்டது.

குறிப்பாக வடக்கு- கிழக்கு மாகாணங்களில் பௌத்த வழிபாட்டுக்குரிய அடையாளங்களை பௌத்த குடியிருப்புகள் இல்லாத இடங்களில் பாதுகாப்பு தரப்பினர் ஈடுபடுவது தொடர்பாகவும் அவரால் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

எந்த மதமாக இருந்தாலும் ஒரு இடத்தில் மத வழிபாட்டுக்குரிய அடையாளம் நிறுவுவது என்றால் அந்த பகுதியிலுள்ள பதிவு செய்யப்பட்ட சிவில் மற்றும் மத அமைப்புகளின் கருத்துக்களை பெற வேண்டும் என்பது சட்ட ரீதியாக உறுதிப்படுத்தப் பட வேண்டும் என்றும் சமூக நல்லிணக்கத்திற்கும் வலுவூட்டலுக்குமான அமைப்பு முன் வைத்த கருத்துக்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முஸ்லிம் பிரதேசங்கள் புறக்கணிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிவில் மற்றும் உள்ளூராட்சி சபை நிர்வாக ரீதியாக 14 பிரதேசங்கள் உள்ளன. இந்த பிரதேசங்களில் நான்கு பிரதேசங்கள் முஸ்லிம் பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இம் மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள வாழைச்சேனை , வாகரை , களுவாஞ்சிகுடி , மட்டக்களப்பு மற்றும் கொக்கட்டிச்சோலை ஆகிய இடங்களில்தான் மக்கள் கருத்தறியும் அமர்வுகள் நடைபெற்ற முடிந்துள்ளன.

அமர்வு நடைபெறுவதற்கான இடங்கள் தெரிவில் ஒரு முஸ்லிம் பிரதேசம் தெரிவு செய்யப்படாமை குறித்து முஸ்லிம் சிவில் அமைப்புகளினால் கவலை தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய இறுதி நாள் அம்வின்போது கருத்தை முன் வைத்த ஏறாவுர் பிரதேச பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் ஏ.சி. எம் ஷயிட் ´´ இம் மாவட்டத்தில் 39 ஆயிரம் முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கின்ற போதிலும் அவர்கள் தங்கள் கருத்துக்களை முன் வைக்க போதிய வாய்ப்பளிக்கவில்லை .´´ என்று குற்றச்சாட்டை முன் வைத்தார்.

மேலும், ´´இதன் காரணமாக இந்த அமர்வு இம் மாவட்ட முஸ்லிம்களிடமிருந்து நம்பகத்தன்மையை இழந்துள்ளது ´´ என்றும் குறிப்பிட்டார் .

Related Posts