Ad Widget

இலங்கை மீதான தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்ய முயற்சி

ஜெனிவாவில் இலங்கை மீதான நகல் தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்யும் புதிய தீர்மானமொன்றை வழமை போல ‘ஆக்கபூர்வமான செயற்பாடு’ எனும் போர்வையின் கீழ் சீனாவும் ரஷ்யாவும், கியூபாவும் ஆதரவளிக்கின்றன என்று அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமை காப்பகம் கூறியுள்ளது.

இந்த தீர்மான வரைவின் மீது மனித உரிமை பேரவையில் இலங்கை தூதுக்குழு தொடர்ச்சியாக பல திருத்தங்களை முன்மொழிந்தது. இதன்மூலம் அறிக்கையின் பரிந்துரைகளை செயற்படுத்தல், நீதி முறைமையில் சர்வதேச பங்குடமை மற்றும் தண்டனை வழங்கல் என்பனவற்றை நீக்கும்படி கேட்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர், சாட்சியங்களை பாதுகாத்தல், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல், பாலியல் வன்முறை, சித்திரவதை என்பவற்றை விசாரித்தல் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் முன்மொழிவுகள் இல்லை என்றும் எந்தவொரு பந்தியிலும் திருத்தம் செய்யாது, நீக்கிவிட வேண்டுமென இலங்கை தூதுக்குழு கேட்டுள்ளது என மனித உரிமை காப்பகத்தின் ஜெனிவா பணிப்பாளர் ஜோன் பிஷர் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது,

மோதலில் பாதிக்கப்பட்டவர்கள் பல வருடங்களாக, தசாப்தங்களாகக் காத்திருந்தனர். முன்னைய ஆட்சியின் போலன்றி இந்த அறிக்கை பற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினுடைய கருத்துக்கள் அறிக்கையை ஓரளவு ஏற்பது போலத் தெரிந்தன.

முன்னைய காலத்து மறுக்கப்பட்ட வாக்குறுதிகளை வைத்து எம்மை கணக்குப்போட வேண்டாம் என வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறியபோது கூடுதல் நம்பிக்கை ஏற்பட்டது.

ஆனால், அறிக்கை மீதான நகல் தீர்மானத்தையிட்டு பேச ஜெனிவாவில் ராஜதந்திரிகள் சந்தித்த போது, இலங்கை பிரதிநிதிகள் தமது பழைய தந்திரத்துக்கு திரும்பிவிட்டதை காண முடிந்தது.

வழமைபோல சீனாவும் ரஷ்யாவும், கியூபாவும் ஆக்கபூர்வமான செயற்பாடு என்ற போர்வையின் கீழ் இலங்கையின் வெறுக்கத்தக்க முயற்சிகளை ஆதரித்தன.

பொறுப்புக்கூறுதலை செயற்படுத்துவதாக தான் கூறுவதை சர்வதேசம் ஏற்க வேண்டுமென இலங்கை கேட்கிறது. கணிசமான சர்வதேச தலையீடின்றி நீதி வழங்கும் ஆற்றல் இலங்கைக்கு உள்ளது என கருத எந்தவொரு அடிப்படையும் இல்லை.

நடந்த குற்றங்களுக்கு சரியான நீதியை இலங்கை பாதிக்கப்பட்டவர்களுக்கு பெற்றுக்கொடுப்பது இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்த முக்கிய நாடுகளின் பொறுப்பாகும். இல்லாவிடின் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் மேலும் வன்முறைக்கும் துன்பத்துக்கும் ஆளாக நேரிடும். அவர்கள் ஏற்கெனவே போதியளவு துயரப்பட்டுவிட்டார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts