Ad Widget

இலங்கை மீதான சர்வதேச விசாரணையை கெமரூன் கோருவார் – ரன்கின்

jhon-rankinஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மீதான சர்வதேச விசாரணையைக் கோருவதற்கான உரிய நடவடிக்கையை பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன் முன்னெடுத்து வருகிறார் என்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரன்கின் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் வைத்து வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நேற்று சந்தித்து உரையாற்றும் பொதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போதே உயர்ஸ்தானிகள் மேற்கண்டவாறு தெரிவித்தார் என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பு தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த வட மாகாண முதலமைச்சர், ‘நடைமுறையில் என்னென்ன நடக்கிறது என்பதை ஆராயும் நோக்கில் பிரித்தானிய உயர்ஸ்தானிகள் நேற்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார். வடமாகாண ஆளுநரைச் சந்தித்த பின்னர் என்னையும் சந்தித்து கலந்துரையாடி இங்குள்ள நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்தார்’ என்று கூறினார்.

‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிர்வாகத்தின் கீழுள்ள வடமாகாண சபையும், வடமாகாண ஆளுநரும் இணைந்து வடமாகாணத்தை நிர்வகித்தால் என்ன? நாங்கள் அதற்குரிய எல்லா நடவடிக்கைகளையும் எடுக்கின்றோம். இதுபற்றி நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்? என்று உயர்ஸ்தானிகர் என்னிடம் கேள்வி எழுப்பினார்.

தனிப்பட்ட ரீதியில் எங்களுக்குள் எந்தவித பிரச்சினையும் இல்லை. பல சந்தர்ப்பங்களில் எங்களால் எடுக்கப்படும் பல தீர்மானங்கள் முறியடிக்கப்படுகின்றன. வடமாகாண சபையினால் கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு எதிராக ஆளுநரும் மத்திய அரசாங்கமும் செயற்பட்டு வருகின்றார்கள்.

இதனால் எங்கள் வேலைகள் தடைப்படுகின்றன. தனிப்பட்ட ரீதியில் எனக்கும் ஆளுநருக்கும் எந்தவித பிரச்சினையும் இல்லை. நேற்றும் ஆளுநரைச் சந்தித்து கலந்துரையாடினேன். நிர்வாக ரீதியில் பிரச்சினைகள் ஏற்படுகின்ற போது எங்கள் பணிகளை செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது என்பதை நான் அவரிடம் எடுத்துக்காட்டினேன்’ என்றார்.

‘இது தொடர்பில் தான் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசுவதாக உயர்ஸ்தானிகள் கூறினார்.இங்கு வாழும் மக்களின் தேவைகள் குறித்து அவர்களுக்கு தெரியும். அது தொடர்பில் ஐ.நா நிறுவனங்களின் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசிக்கொண்டிருக்கின்றார்கள் என்றும் அவர் தெரிவித்தார். நாங்கள் விரைவில் எல்லோருடனும் சேர்ந்து எங்களின் தேவைப்பாடுகளுக்கு ஈடுகொடுப்பது என்பது பற்றி கலந்துரையாடல் ஒன்றை நடத்துவோம் என்றும் உயர்ஸ்தானிகள் குறிப்பிட்டார்’ என்று முதலமைச்சர் கூறினார்.

சர்வதேச விசாரணை கோரவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் தெரிவித்தது குறித்து, உயர்ஸ்தானிகருடன் பேசப்பட்டதா? என ஊடகவியலாளர்கள் முதலமைச்சரிடம் கேட்டனர்.

‘அதைப்பற்றி அவர் தனது கூற்றாகச் சொல்லவில்லை. மாறாக தங்களின் பிரதமர் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையைக் கோருவோம் என்று கூறிய கூற்றுக்கு ஏற்ப நடவடிக்கையை எடுத்துக்கொண்டிருக்கின்றார் என்றும், உங்கள் மனதிற்கு சந்தோசம் அளிக்கும் விதத்தில் அவர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்றும் என்னிடம் அவர் தெரிவித்தார்’ என முதலமைச்சர் பதிலளித்தார்.

‘இங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் அனைத்து விடயங்களையும் சர்வதேசம் கண்காணித்துக்கொண்டிருக்கின்றது. எங்கள் கருத்துக்களில் இருந்து எடுத்து அவருக்கு தெரிவிப்பார் என்று நான் நினைக்கின்றேன். தமிழ் மக்களின் பிரச்சினையால் தான் இந்த உலகத்தில் இருக்கின்ற இந்த சின்ன மாகாண சபை பற்றி பேசப்படுகின்றது.

அதை நாங்கள் தெளிவாகத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். இங்கு வருவதற்கு முன்னரே இங்கு என்ன நடக்கிறது என்பதை அவர்கள் படித்துக்கொண்டே வருகின்றார்கள் ஆகவே இதில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. என்ன நடக்கும் என்பதை நாங்கள் இருந்து பார்ப்போம்’ என்று முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related Posts