ஸ்ரீலங்கா பிரஜை ஒவ்வொருவரும் மாதாந்தம் பெற வேண்டிய ஆகக்குறைந்த அடிப்படைச் சம்பளம் தொடர்பிலான அறிவிப்பை பிரதமர் விரைவில் முன்வைப்பாரென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபிர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
அரசாங்க ஊழியர்களுக்கு மட்டுமன்றி பொதுவாக அனைத்து ஊழியர்களுக்கும் நடைமுறைக்கு வரும் வகையிலேயே ஆகக்குறைந்த அடிப்படைச் சம்பளம் பற்றிய அறிவிப்பு முன்வைக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சுவீடன் நாட்டில் நாளொன்றுக்கு கட்டாயம் வேலை செய்ய வேண்டிய நேரம் 06 மணித்தியாலங்களாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் அதற்காக அவர்களின் வழமையான சம்பளத்தில் மாற்றம் செய்யப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆகவே ஸ்ரீலங்கா பிரஜைகளுக்கும் ஆகக் குறைந்த அடிப்படைச் சம்பளம் அறிமுகம் செய்து வைக்கப்பட வேண்டுமென்பதே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் விருப்பமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கான கலந்துரையாடல்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் மக்களுக்கு பிரதமர் அந்த அறிவிப்பை முன்வைப்பாரென்றும் அமைச்சர் சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
சுமார் 20 வருடங்களுக்குப் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைத்துள்ளமையனது, ஆதரவாளர்களின் அர்ப்பணிப்புடனான செயற்பாடே காரணமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சிக்காக உழைத்தவர்களுக்கு சிறந்த சந்தர்ப்பங்களைப் பெற்றுத்தரும் ஆண்டாக இவ்வருடம் பிரகடனம் செய்யப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
கடந்த அரசாங்கத்தில் தொழில் வழங்குவதாக கூறி தராதரமின்றி அனைவருக்கும் நினைத்தவாறு தொழில் நியமனங்கள் வழங்கப்பட்டதாகவும், பிக்குகளுக்கு மீன்பிடி அமைச்சில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்த அரசாங்கத்தில் அரசியல் பழி வாங்கலுக்கு இனிமேலும் இடமில்லை எனவும், முன்னாள் ஜனாதிபதி யுத்த பூமியை போதைவஸ்து விற்கும் பூமியாக்கியதாகவும், எனினும் நாம் அதனை வேலைவாய்ப்பினை அள்ளித்தரும் பூமியாக மாற்றுவோம் எனவும் அமைச்சர் கபிர் ஹாசிம் மேலும் தெரிவித்துள்ளார்.