Ad Widget

இலங்கை நீதித்துறை அரசியல் மயமானதால்தான் சர்வதேச வல்லுநர்கள் பங்குபெறுவதை ஐ.நா. வலியுறுத்தியது!

இலங்கையின் நீதித்துறை கடந்த சில காலமாகவே அதிக அளவில் அரசியல் மயமாக்கப்பட்டு, சமநிலையை இழந்து, நம்ப முடியாத நிலையை எட்டியதால்தான், இலங்கையில் நடந்து முடிந்த போரில் இருதரப்புகளாலும் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற உருவக்கப்பட வேண்டிய பொறிமுறைகளில் சர்வதேச வல்லுநர்கள் பங்கு பெறுவதை ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் பிரேரித்ததாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் செய்யத் ரா அத் அல் ஹுசைன் கூறியுள்ளார்.

இலங்கைக்கு நான்கு நாள்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு அரசியல் மற்றும் சிவில் சமூகத் தலைவர்களை சந்தித்த பின்னர், நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் வெளியிட்ட அறிக்கையொன்றில், ஐ.நா. மனித உரிமைக் கவுன்ஸில் கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கை குறித்து நிறைவேற்றிய தீர்மானம் பற்றி பல புனைவுகளும், தவறான புரிதல்களும் காணப்படுவதாகக் கூறிய அல் ஹுசேன், அந்தத் தீர்மானம், இலங்கையின் இறையாண்மையிலோ அல்லது சுதந்திரத்திலோ தேவையற்ற வகையில் தலையிடும் ஒரு முயற்சியல்ல என்றார்.

இலங்கை அந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது, அதன் பலவீனத்தைக் காட்டவில்லை, மாறாக , அதன் பலத்தையே காட்டியது என்றார்.

அத்தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொண்ட அந்த நிகழ்வு, தனது கடந்த கால சம்பவங்களை நேர்மையுடன் எதிர்கொண்டு அது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாவண்ணம் தடுக்க இலங்கை எடுத்துக்கொண்ட உறுதிப்பாடாகவே கருதப்படவேண்டும் என்றும் அவர் கூறினார்.

இலங்கையில் பல திறமையான நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகள் இருந்து, பல ஆண்டுகளாக நீதித்துறை அரசியல் மயமாக்கப்பட்டுவிட்டது என்றார். அவர். கடந்த பல தசாப்தங்களாகவே , இலங்கையின் வரலாற்றில் பல நீதித்துறை தோல்விகள் ஏற்பட்டிருக்கின்றன என்று கூறினார். இதை இலங்கைப் பிரதமரே வெளிப்படையாக கடந்த ஜனவரி 27ஆம் திகதி நடந்த நாடாளுமன்ற விவாதத்தில் குறிப்பிட்டதாக அவர் கூறினார்.

உலக நாடுகள் இலங்கை ஒரு வெற்றிகரமான நாடாக இருக்கவேண்டும் என்றே விரும்புவதாகக் கூறிய அவர், இலங்கையில் நீடித்த அமைதியை உருவாக்கக் கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தை இப்போது உலகம் கண்டிருக்கிறது என்றார். எனவே தான் கடந்த ஒக்டோபரில் இலங்கை குறித்த அந்த தீர்மானத்தை மனித உரிமை கவுன்சிலில் நிறைவேற்ற உலக நாடுகள் கணிசமான சக்தியையும், நேரத்தையும் செலவழித்தன என்றார்.

இத்தீர்மானம் ஏன் முக்கியமானது என்பதை அனைத்து இலங்கையர்களும் புரிந்து கொண்டு அதை ஏன் மற்ற நாடுகளும் ஐ.நா மன்றமும் அங்கீகரித்தன என்பதை விளக்கினால், சீர்திருத்தங்களுக்கும் நீதியை வழங்குவதற்கும் எதிரான குரல்களுக்கு ஆதரவு இருக்காது என்றார்.

கடந்த தேர்தலில் இலங்கை மக்கள் மாற்றத்துக்கும் நல்லிணக்கத்துக்கும் ஆதரவாக வாக்களித்தனர் என்று கூறிய அல் ஹுசேன், சிறுபான்மை தீவிரவாதக் குரல்கள் அச்சத்தை உருவாக்கி நிலைமையை குழப்புவதில் வெற்றி கண்டால் அது பெரும் அவமானகரமானது என்றார்.

அரசு மாற்றங்களை உருவாக்க தேவையான மன உறுதியைக் காட்டியிருக்கிறது என்று கூறிய அவர், ஆனால் வடக்கு, கிழக்கிலும், கொழும்பில் உள்ள அறிவு ஜீவிகள் சிலர் மத்தியிலும், அரசு தனது மனித உரிமை கடப்பாடுகளிலிருந்து வழுவிவிடுமோ என்ற அச்சங்கள் காணப்படுவதைத் தான் பார்த்தார் என ஹுசேன் கூறினார்.

எனவே ஜனாதிபதியும் பிரதமரும் இன்று தன்னிடம் இது குறித்து அளித்த உறுதிமொழிகள் தனக்கு மன நிறைவைத் தருவதாகவும் அவர் கூறினார்.

இலங்கை ஒரு பொருளாதார சக்தியாக உருவாகவேண்டும், இலங்கை ராணுவம் அதன் மீது படிந்திருக்கும் களங்கத்தைத் துடைத்தெறிந்து எதிர்காலத்தில் மீண்டும் சர்வதேச அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஆக்கபூர்வமான பங்காற்றவேண்டும் என்று சர்வதேச சமூகம் விரும்புவதாகவும் அல் ஹுசேன் கூறினார்.

ஆனால் அது எல்லாம் நடக்கவேண்டுமென்றால், இலங்கை தனது கடந்த கால நிகழ்வுகளை எதிர்கொண்டு, கடந்த காலத்தில் தவறிழைத்தவர்களைத் தண்டிக்கவேண்டும் என்றார் அவர்.

Related Posts