Ad Widget

இலங்கை தமிழ் அகதிகள் விவகாரம் இந்திய அரசாங்கத்துடன் விரைவில் பேச்சுவார்த்தை : த.தே.கூ

இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்துவரும் இலங்கை தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு வரவழைக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும், இலங்கையில் அவர்களுக்கான பாதுகாப்பான சூழலை உருவாக்கிக்கொடுக்க இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுகின்றது.

2019 ஆம் ஆண்டு புதிய குடியுரிமை திருத்த சட்டத்தை இந்த அரசாங்கம் கொண்டுவந்துள்ள நிலையில் இந்த சட்டத்தின் பிரகாரம் மத ரீதியில் துன்புறுத்தப்பட்ட அகதிகள் தவிர்ந்து ஏனைய அனைவரும் இந்திய பிரஜைகள் அல்ல என்ற நிலைப்பாட்டினை இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கை அகதிகள் வெளியேற்றப்பட வேண்டும் என்ற கருத்தும் இந்தியாவில் முன்வைக்கப்பட்டுள்ள காரணத்தினால் தமிழகத்தில் இது குறித்த கருத்து முன்வைப்புகள் மற்றும் விவாதங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் இலங்கை அகதிகள் விடயத்தில் தமிழ் தரப்பின் சார்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வாறான நிலைப்பாட்டில் உள்ளதென வினவிய போதே இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா இதனைக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

அகதிகள் விடயத்தில் நாம் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருகின்றோம். குறிப்பாக இந்தியாவில் உள்ள இலங்கை தமிழர்கள் விடயத்தில் அவர்களை மீண்டும் இலங்கைக்கு வரவழைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உள்ளோம்.

இந்த விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் தொடர்புபட்டுள்ள ஒன்றாகும். அதாவது அகதிகள் விடயத்தில் அவர்களின் அக்கறையும் உள்ளது.

அத்துடன் இந்திய அரசாங்கமும் இது குறித்து சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை நாம் தொடர்ச்சியாக அவர்களிடம் முன்வைத்து வருகின்ற காரணியாகும். இன்றும் சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்தியாவில் அகதிகளாக உள்ளனர்.

அவர்களை இலங்கைக்கு வரவழைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னைய ஆட்சியின் போதும் நாம் கூறினோம். அவர்களின் முழுமையான விருப்பத்துடன் அவர்களை இங்கு வரவழைக்கும் வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

Related Posts