Ad Widget

‘இலங்கை தமிழர்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை’

இலங்கை சுதந்திரம் பெற்றுவிட்டதாக அரசாங்கம் கூறிக்கொண்டு வந்தாலும் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லையென மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின், ‘ஜெனீவாத் தீர்மானமும் மெய்நிலையும் அரசியலும் ஒரு நோக்கு’ என்றும் நூல் வெளியீட்டு விழா கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுச் சபை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

‘ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மனித உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இலங்கையிலுள்ள தமிழர்களின் உரிமை, நாட்டிலுள்ள அனைத்து மக்களின் உரிமை மற்றும் பல்வேறு நாடுகளிலுள்ள மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் இது உருவாக்கப்பட்டது.

இலங்கையில் மனித உரிமைகளை கவனத்திலெடுக்காத அரசாங்கங்கள், இலங்கை சுதந்திரம் பெற்றுவிட்டது என்ற மாயையை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆனால் இங்கு வாழும் தமிழர்கள் சுதந்திரம் இல்லாதவர்களாக வாழ்கின்றார்கள்.

தமிழர்கள் என்பதால் பலர் கொலை செய்யப்படுகின்றார்கள். தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு காலம் காலமாக நடக்கின்றது. தமிழர்களின் உயிரையும் அவர்களின் உரிமையையும் ஐ.நா. மனித உரிமை பேரவை பாதுகாக்க முன்வரவேண்டும். இலங்கையில் மட்டுமல்ல உலகம் பூராகவும் மனித உரிமைகள் காக்கப்படவேண்டும் என்றார்

Related Posts