Ad Widget

இலங்கை ஜனாதிபதிக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் – ததேகூ

இலங்கையில் மீள்குடியேற்றம், நிலங்கள் விடுவிப்பு உள்ளிட்ட பல விடயங்களில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.

suresh

மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள சூழலிலேயே தமிழ்க் கூட்டமைப்பின் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவரும் வேளையில், திரும்புவர்கள் மீள்குடியேறுவதற்கான நிலங்கள் உத்தரவாதம் செய்யப்பட வேண்டும் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

உள்ளூர் மக்களின் சில நிலங்கள் இன்னும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது, இந்தியாவிலிருந்து வருபவர்களின் மீள்குடியேற்றம் எந்த அளவுக்கு சாத்தியமாகும் எனவும் அவர் கேள்வி எழுப்புகிறார்.

இராணுவத்தின் பிடியில் இருக்கும் நிலங்கள் முழுமையாக விடுவிக்கப்பட்டு அங்கு மக்கள் தமது சொந்த இடத்தில் மீளக்குடியேறுவதற்கு இந்தியா அழுத்தம் கொடுத்தால் அது மிகவும் வரவேற்கத் தக்கதாக அமையும் என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார்.

புதிய ஜனாதிபதியுடன் தாங்கள் பல முறை பேசியுள்ளதாகவும், அவர் இலங்கையில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து முழுமையாக அறிந்துள்ளார் எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

அவ்வாறே, இந்தியாவுக்கும் மக்களின் மீள்குடியேற்றம், காணமல்போனவர்கள் குறித்த விபரங்கள் இல்லாமை, விசாரணைகள் ஏதுமின்றி ஆண்டுகள் கணக்கில் சிறையிலுள்ள தமிழர்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் போன்றவை முழுமையாகத் தெரியும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கூறுகிறார்.

இலங்கை ஜனாதிபதியின் விஜயத்தின்போது உறுதியான தீர்வுகள் எட்டப்படும் வகையில் இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பாக்கிறது எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

Related Posts