Ad Widget

இலங்கை – சீனாவுக்கு இடையில் 4 ஒப்பந்தங்களும் கைச்சாத்து

வலயத்தில் முக்கியமானதொரு இராஜதந்திர முக்கியஸ்தானத்தை இலங்கைக்கு எப்போதும் வழங்கத் தயாராக உள்ளதாக சீன ஜனாதிபதி ஷீ ஜிங் பிங், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று வியாழக்கிழமை (26) உறுதியளித்தார்.

சீனாவுக்கான நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை (26) இருதரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இந்த இரு தரப்பு சந்திப்புக்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சீன ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

இதனையடுத்து, இலங்கை மற்றும் சீனாவுக்கிடையிலான உறவைப் பலப்படுத்தும் வகையில்,இரு நாடுகளுக்கும் இடையில் நான்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

சுகாதாரம், விஞ்ஞானம், கல்வி, சமூகம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி என்ற நான்கு உடன்படிக்கைகளே இதன்போது கைச்சாத்திடப்பட்டன.

சீனாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாளை சனிக்கிழமை (28) சீனாவில் நடைபெறவுள்ள ‘போஆ’ சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்.

ஆசியாவின் அபிவிருத்தி மற்றும் பொருளாதாரம் தொடர்பான மேற்படி மாநாட்டில், இலங்கையின் அபிவிருத்தி மற்றும் பொருளாதார செயற்பாடுகள் தொடர்பில் சர்வதேசத்துக்கு இதன்போது ஜனாதிபதி தெளிவுபடுத்துவார்.

இலங்கை ஜனாதிபதி உட்பட உயர்மட்டக்குழுவின் சீன விஜயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள சீனாவின் வெளிவிவகார பேச்சாளர் ஹூஆ சுன்யன், ‘இருதரப்பும் நன்மை பெறக்கூடிய வகையில் இலங்கை அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருவதாக’ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கை அரசாங்கம் நீண்டகால நலன் அடிப்படையில் செயற்படும் என்று தாம் நம்புவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், சீனாவும் இலங்கையும் தெளிவான பேச்சுவார்த்தை மற்றும் கொள்கைகளின் அடிப்படையிலேயே முன்னதாக உடன்படிக்கைகளை செய்துகொண்டன என்றும் சீனா, இலங்கையில் மேற்கொண்டுள்ள முதலீடுகளின் மூலம் அந்த நாட்டின் வாழ்வாதாரம் முன்னேறும் என்றும் கூறியுள்ளார்.

அத்துடன், இலங்கையில் செயற்படும் சீன நிறுவனங்களுக்கு சீன அரசாங்கம் தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என்றும் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts