Ad Widget

இலங்கை காவல்துறைக்கு எதிராக 6 மாதங்களில் ஆயிரம் புகார்கள்

இலங்கையில் கடந்த 6 மாதக் காலப்பகுதியில் பொலிஸாருக்கு எதிராக ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஆணையத்தின் செயலாளர் ஆரியதாஸ குரே தெரிவித்தார்.

பொதுமக்களின் முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்காமல் இருத்தல், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் பக்கச்சார்பாக நடத்தல் ஆகியவை தொடர்பிலேயே அதிக முறைப்பாடுகள் கிடைப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

பொலிஸாருக்கு எதிராக வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளில் சுமார் 200 முறைப்பாடுகள் விசாரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆரியதாஸ குரே தெரிவித்தார்.

இதனிடையே, பொலிஸாரின் முறைகேடான நடவடிக்கைள் தொடர்பில் சமூக வலைதளங்களில் வெளியாகும் வீடியோக்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது கடினம் என்றும் அவர் தெரிவித்தார்.

பொலிஸாருக்கு எதிராக மக்கள் முறைப்பாடு செய்தால் தகுந்த சாட்சியங்களைக்கொண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என்றும அவர் மேலும் தெரிவித்தார்.

19-வது அரசியல்யாப்பு சீர்திருத்தத்தின் அடிப்படையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts