Ad Widget

இலங்கை அரச ஊடகங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டன

இலங்கையில் நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரச ஊடக நிறுவனங்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு சார்பாக, மிக மோசமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக ட்ரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ஷவுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து அரச ஊடக நிறுவனங்கள் செயற்பட்டது மட்டுமன்றி அவரது பிரதான போட்டி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன மீது சேறு பூசும் செய்திகளையும் வெளியிட்டதாகவும் ட்ரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனல் நிறுவனம் கூறுகின்றது.

அரச ஊடக நிறுவனங்கள் பொதுமக்களின் சொத்துக்கள் என்ற ரீதியில் பக்கச்சார்பற்ற பொது நிறுவனங்களாக செயற்பட்டனவா என்று ஆராய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு ஆய்வுகளிலேயே இந்த விபரங்கள் வெளியாகியுள்ளதாக அந்த நிறுவனம் புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது.

அரச தொலைக்காட்சி மற்றும் வானொலி நிறுவனங்கள் மற்றும் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் அச்சு ஊடகங்களின், தேர்தலுக்கு முன்னரான ஒருமாத கால செயற்பாடுகளை ட்ரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனல் நிறுவனம் ஆராய்ந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

‘வசந்தம் தொலைக்காட்சி- தேர்தல் காலத்தில் செய்திகளுக்காக ஒதுக்கியிருந்த 323 நிமிடங்களில் 197 நிமிடங்கள் தேர்தலுடன் தொடர்புடையவை’ என்று கூறிய மூத்த ஊடகவியலாளர் ரவி ரத்னவேல், ‘அதில் 135 நிமிடங்கள் மகிந்த ராஜபக்ஷவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கு 13 நிமிடங்களுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தன’ என்று கூறினார்.

அவ்வாறே, லேக்ஹவுஸ் அரச ஊடக நிறுவனத்தின் அச்சு ஊடகங்களும் மகிந்த ராஜபக்ஷவுக்கே முன்னுரிமை கொடுத்து செய்திவெளியிட்டிருந்ததாகவும் ஏனைய வேட்பாளர்களுக்கு போதிய வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றும் தமிழ் மொழிமூல அரச ஊடக செய்திகளை கண்காணித்து அறிக்கையிட்ட மூத்த ஊடகவியலாளர் ரவி ரத்னவேல் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

தேர்தல் காலத்தில் அரச ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான கூடுதல் அதிகாரங்கள் தேர்தல்கள் ஆணையாளருக்கு வழங்கக்கூடிய விதத்தில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் குறித்த ஆய்வறிக்கை பரிந்துரை செய்துள்ளது.

அவ்வாறே, ஊடகங்களை நெறிப்படுத்துவதற்கான சுயாதீன ஆணையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்பதும் இந்த ஆய்வில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளில் ஒன்று.

Related Posts