Ad Widget

இலங்கை அரசின் நம்பிக்கையான நடவடிககைகளுக்குப் பின்னரே அகதிகளை திருப்பி அனுப்ப வேண்டும்!

இலங்கை அரசு உறுதியான, நம்பத்தகுந்த நடவடிக்கைகளை எடுத்த பின்னரே இலங்கை அகதிகளை அவர்களின் தாயகத்துக்கு திருப்பி அனுப்பும் நடைமுறை குறித்து மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.

o-panneerselvam

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்றுப் புதன்கிழமை அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:

தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதிகளை தாயகம் அனுப்பி வைப்பதற்கான நடைமுறைகள் குறித்து ஆலோசிப்பதற்காக, வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்தின் மூத்த அரசு அதிகாரியை அனுப்பி வைக்குமாறு மத்திய அரசு கடிதம் மூலம் கோரியுள்ளது.

இந்தக் கூட்டத்தை தள்ளிவைக்க வேண்டும். இலங்கைத் தமிழர்கள் விரும்பும் பட்சத்தில் தாயகத்துக்குத் திருப்பி அனுப்பப்படுகின்றனர். இந்தச் சூழ்நிலையில் அவர்களைத் தாயகம் திருப்பி அனுப்புவதற்கான நடைமுறைகள் குறித்து ஒரு கலந்தாய்வுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்வது என்பது அவர்கள் தங்கள் நாட்டுக்குச் செல்வதை ஊக்குவிப்பதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இப்போதிருக்கும் சூழ்நிலைகள் அகதிகளை அவர்களின் தாயகத்துக்குத் திருப்பி அனுப்பி வைப்பதற்கு சாதகமாக இல்லை. இலங்கைத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பலமுறை வலியுறுத்தி வந்துள்ளார்.

இதனை உறுதி செய்யும் வகையில் தமிழக சட்டப் பேரவையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளன. எனினும் தமிழர் பகுதிகளில் இலங்கை இராணுவம் தொடர்ந்து நீடிப்பது அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

அங்கு தமிழர்கள் தாங்கள் வசிக்கும் சொந்தப் பகுதிகளிலேயே சிறுபான்மையினர் ஆக்கப்பட்டு விடுவார்களோ என்ற கவலை உள்ளது. இலங்கையில் மீள்குடியமர்வுக்கான நடவடிக்கைகளை உறுதியாகவும், திறம்படவும் மேற்கொண்டால் மட்டுமே இலங்கைக்கு வெளியேயுள்ள தமிழர்களுக்கு தாயகம் திரும்ப வேண்டும் என்ற விருப்பமும், நம்பிக்கையும் ஏற்படும்.

தமிழகத்தில் அகதிகள் முகாம்களில் வசிக்கும் தமிழர்களின் கருத்தும் இதுவாகவே உள்ளது. எனவே, தமிழர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில், இலங்கை அரசு உறுதியான, நம்பத்தகுந்த நடவடிக்கைகளை எடுத்த பின்னரே இலங்கைத் தமிழர்கள் தாயகம் திரும்புவதற்கான நடைமுறையை ஆலோசிக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு போதுமான உறுதியான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு, தாயகம் திரும்புவதற்கான நம்பிக்கையை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Related Posts