Ad Widget

இலங்கை அணி மீது தாக்குதல் நடத்திய நால்வர் சுட்டுக் கொலை

பாகிஸ்தானில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகமான தி ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது.

இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் லஸ்கர் ஈ ஜாங்வி (Lashkar-e-Jhangvi) அமைப்பைச் சேர்ந்தவர்களாவர்.

லாகூரிலுள்ள மனவான் பகுதியில் வைத்து ஏழு தீவிரவாதிகள் மீது அந்த நாட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தாக்குதல் மேற்கொண்டதாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது நால்வர் கொல்லப்பட்ட நிலையில் மீதமிருந்த மூவர் தப்பிக்க முயற்சித்ததாகவும், அவர்களைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், குற்றப் புலனாய்வுப் பிரிவின் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை கொல்லப்பட்டவர்கள் சுபைர் அலைஸ் நைக் முகமட், அப்துல் வகாப், அர்ஷாட் மற்றும் ரஹ்மான் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர்கள் 2009ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் செய்த போது, லாகூர் நகரில் வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் மற்றும் 2008ம் ஆண்டு லாகூர் மூன் மார்க்கெட் மீதான தாக்குதல் போன்றவற்றுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்துள்ளதாக, இந்திய ஊடகமான திஹிந்து தெரிவித்துள்ளது.

Related Posts