“இலங்கையை இரண்டாகப் பிளவுபடுத்துவதற்கோ, தேசத்தின் இறையாண்மையைப் பாதிக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கோ அரசு ஒருபோதும் இடமளிக்காது. இதனை மீறும் எந்தவொரு வரைவுக்கும் – தீர்மானத்திற்கும் அரசு ஆதரவு வழங்கவே மாட்டாது.” இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இனப்பிரச்சினைக்கு தீர்வாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த சுயாட்சியுடன் கூடிய சமஷ்டி முறைமையே அவசியம் என்று வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பாக எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
இந்தக் கேள்விக்கு ஜனாதிபதி அளித்த முழுமையான பதில் வருமாறு:-
“மாகாண சபைகளில் எத்தனையோ தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. ஏன் எமது நாடாளுமன்றத்தில் கூட 1947ஆம் ஆண்டு முதலாக எத்தனையோ தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிக்கின்றன. நாடாளுமன்றில் 1947ஆம் ஆண்டு முதலாக எத்தனையோ சட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அதில் பல நடைமுறைப்படுத்தப்படவில்லை. மாகாணசபையில் தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டதற்காக அதுகுறித்து நாம் அச்சப்படத்தேவையில்லை. இலங்கையை இரண்டாகப் பிளவுபடுத்துவதற்கோ, தேசத்தின் இறையாண்மையைப் பாதிக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கோ அரசு ஒருபோதும் இடமளிக்காது. இதனை மீறும் எந்தவொரு வரைவுக்கும் – தீர்மானத்திற்கும் அரசு ஆதரவு வழங்கவேமாட்டாது” – என்றார்.
“தமிழீழம்தான் ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட தமிழக அரசியல்வாதிகள் தேர்தல் பிரசாரங்களில் கூறி வருகின்றனர். இதுபற்றி உங்களின் கருத்து என்ன?” என்று ஜனாதிபதியிடம் வினவியபோது,
“தமிழகத் தலைவர்கள் தேர்தலை மாத்திரம் இலக்காகக்கொண்டு வாக்குகளை ஈர்த்துக்கொள்வதற்காக இவ்வாறான பிரசாரங்களை முன்னெடுத்துச் செயற்படுகின்றனர். இந்திய மத்திய அரச தரப்பினருடன் இதுபற்றிப் பேசியிருக்கின்றோம். தமிழகத் தலைவர்களின் கருத்துக்கள் குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை” – என்றார்.
“2015ஆம் ஆண்டு ஜெனிவாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆறு மாதங்கள் சென்றுவிட்டன. இந்நிலையில் இறுதிப் போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து எத்தகைய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது?” என்று எழுப்பிய மற்றுமொரு கேள்விக்கு ஜனாதிபதி பதிலளிக்கும்போது,
“ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளரைச் சந்தித்தவேளை மூன்று விடயங்கள் தொடர்பில் விசேடமாக கவனம் செலுத்தும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார். போரினால் பாதிக்கப்பட்ட மக்களை விரைவாக மீளக்குடியேற்றுவது, காணாமல்போனோர் தொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுத்தல், நீதிமன்ற செயற்பாடுகளை மேலும் சுயாதீனமாக்கல் ஆகிய விடயங்களையே அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இது விடயத்தில் நாம் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம். நேற்றும் இது தொடர்பில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது” – என்றார்.
“வடக்கு, கிழக்கில் முன்னாள் போராளிகள் கைதுசெய்யப்படுகின்றமை தமிழ் மக்கள் மத்தியில் ஒருவித அச்சநிலையை ஏற்படுத்தியுள்ளதே?” என்று எழுப்பிய கேள்விக்கு ஜனாதிபதி பதிலளிக்கும்போது,
கைதுகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பேன்
“பொதுமக்கள் அச்சப்படும் சம்பவங்கள் தொடர்பிலும் கைதுகள் தொடர்பில் நான் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்” என்று உறுதியளித்தார்.
நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலைகள் தொடர்பில் ஊடக நிறுவனங்களின் தலைவர்களுக்கு விளக்கமளிக்கும் நோக்கில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த விசேட சந்திப்பு, நேற்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.
ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக, பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் அனைத்துப் பத்திரிகைகள் மற்றும் இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பத்திரிகைளின் பிரதம ஆசிரியர்கள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இந்தச் சந்திப்பின்போது ஜனாதிபதி பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
இலங்கையில் ஊழல் நிறைந்த ஆட்சி மீண்டும் உருவாகாமலிருப்பதை உறுதி செய்வதற்கே முன்னுரிமை
இலங்கையில் ஊழல் மற்றும் சர்வதிகாரம் நிரம்பிய ஆட்சி மீண்டும் அதிகாரத்தில் அமராமலிருப்பதை உறுதிப்படுத்துவதற்கு சட்டம், அரசமைப்பு மற்றும் அரசியல் ரீதியான செயற்பாடுகளுக்கு அரசானது முன்னுரிமையளித்து செயற்பட்டு வருகின்றது.
தேசிய முக்கியத்துவமிக்க பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே எனது இலக்கு
நாட்டில் பிரச்சனைகள் பல உள்ளன. அவற்றுக்கு வரையறை கிடையாது. அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பின்னால் செல்லமாட்டேன். தேசிய முக்கியத்துவமிக்க பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவற்றுக்குத் தீர்வு காண்பதே எனது இலக்கு.
19ஆவது திருத்தத்தின் ஒரு வருடப் பூர்த்தியை கண்டுகொள்ளவில்லையே!
இன்றைய தினம் முக்கியமானதொரு நாளாகும். 19ஆவது அரசமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டு ஒரு வருடப் பூர்த்தி இன்றாகும். இன்றைய தினம் பத்திரிகைகளைப் பார்வையிட்டேன். ஆனால், எவரும் அதைப்பற்றி எழுதியதாகக் காணக்கிடைக்கவில்லை.
நல்லாட்சியின் எதிர்பார்ப்புகள் பூரணப்படுத்தப்படவில்லை; மக்களின் குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்கள் நியாயமானதே!
பல்வேறு தரப்புகளாலும் பலமான அரசியல்வாதியொன்று கருதப்பட்ட ஒருவரை ஆட்சிப்பீடத்திலிருந்து அகற்றி, புதிய ஆட்சி மாற்றத்தை மக்கள் ஏற்படுத்தினார்கள். அவ்வாறு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய மக்கள் மத்தியில் நல்லாட்சி தொடர்பில் பாரிய எதிர்பார்ப்புகள் இருந்தன. அவையனைத்தும், நல்லாட்சியினால் நிறைவேற்றப்படுமென நம்பினார்கள். ஆனால், நடைமுறையில் அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்வதில் பாரிய சவால்களை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
பொது எதிரணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள் வரை, உண்மையிலேயே நான்தான் பொது எதிரணி வேட்பாளர் என்பதை நான் அறிந்திருக்கவில்லை. ஆக, சுமார் 42 நாட்கள் என்ற குறுகிய காலத்தினுள்ளேயே, 48 வருடங்களாக எதிர் அரசியல் நடாத்திய ஐக்கிய தேசியக் கட்சியுடனும் ஏனைய கட்சிகள் மற்றும் அமைப்புகளுடனும் இணைந்து, வேலைத்திட்டத்தை ஆரம்பித்திருந்தேன்.
கடந்த கால அராஜக ஆட்சியின்மீது விரக்தியுற்றிருந்த மக்கள் எம் மீது நம்பிக்கை கொண்டு, எம்மிடம் ஆட்சிப் பொறுப்பைக் கையளித்தார்கள்.
கடந்த ஆட்சியாளர்களினால் உருவாக்கப்பட்டிருந்த கட்டமைப்புக்கள், செயற்பாடுகள் அனைத்துமே அராஜகமானதாகவும் காவாலித்தனமாகவும் இருந்தது. அவற்றில் மாற்றம் செய்யவேண்டிய சவால், முதலில் எமக்கு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்தகால ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான பொருளாதார கொள்கையின் பலனாக, நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றது. இதனைப் பொருளியல் நிபுணர்கள், சில வருடங்களுக்கு முன்னரே அறிந்திருந்தனர். முன்னைய ஆட்சியாளர்களுக்கும் இது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதுவும், இரு வருடங்கள் முன்னதாக தேர்தலை நடத்துவதற்கு அவர்கள் தீர்மானிக்கக் காரணமாக இருந்தது. இவ்வாறு பல சவால்களை நாம் எதிர்கொண்டு வருகின்றோம்.
கரடுமுரடான பாதையொன்றை செப்பனிடுவதற்கு, முதலில் அந்தப் பாதையினூடாகத்தான் நாம் பயணிக்க வேண்டும். பணியாளர்கள் பொறியியலாளர்கள் இயந்திர சாதனங்களெல்லாம் அந்த சீர்கெட்ட வீதியின் மேலாக பயணித்துத்தானே அதனைச் சீர்செய்யமுடியும். அப்போது, பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படும். அவற்றை எதிர்கொள்ள நாம் தயங்குவோமாக இருந்தால் அந்தப் பாதையை செப்பனிட முடியாது.
நல்லாட்சியின் நிலைமையும் தற்போது அவ்வாறுதான் இருக்கின்றது. கடந்த குடும்ப ஆட்சியாளர்களால் சீரழிக்கப்பட்ட நாட்டை செப்பனிடுவதற்கு முயற்சிக்கின்ற வேளையில், சில அசௌகரியங்களை எதிர்கொள்கின்றோம்.
எவ்வாறெனினும், நானும் பிரதமர் ரணிலும் எவ்வாறான சவால்களையும் கடந்து, நாட்டை சிறப்பான திசையை நோக்கி நகர்த்திச் செல்வோம் என நம்புகின்றோம்.
நல்லாட்சியின் நோக்கத்தை நிறைவேற்ற எதிர்பார்ப்புக்கொண்டிருக்கும் தரப்பினர் ஏன் அந்தக் குழியில் விழுகின்றீர்கள் என்று கேட்கின்றனர். பிரச்சினைக்கு தீர்வு காண்பதென்றால் அதிலிருந்து விலகிச் சென்று அதனைச் செய்யமுடியாது என்பதை அக்கறையுடையவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
சதித்திட்டம் மூலம் ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான எவ்வித சந்தர்ப்பமும் இல்லை
சூழ்ச்சியான முறையில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் அரசு ஒன்றை அமைப்பதற்கு முயற்சிக்கின்றனர். ஆனால், அதற்கு நாடாளுமன்றம் இடமளிக்காது. சாதாரண பெரும்பான்மையுடன் அரசை அமைப்பதாக இருந்தால் அதற்கு 113 ஆசங்கள் தேவை.
ஆனால், 113 ஆசனங்களை எடுக்கக்கூடிய தகுதி அந்த சூழ்ச்சிக்காரர்களுக்கு இல்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் 96 ஆசனங்கள் உள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியிடம் 106 ஆசனங்கள் உள்ளன.
அவர்கள் ஆட்சி அமைப்பதானால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ஆதரவைப்பெற வேண்டும். ஆனால், குறைந்தது 50 ஆசனங்களையாவது அவர்கள் பெற முடியாது.
அப்படியானால், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவைப் பெற வேண்டும். ஆனால், அதுவும் முடியாத காரியம். ஜே.வி.பி., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள் ஒருபோதும், மஹிந்த அணிக்கு ஆதரவு வழங்காது.
இந்த நிலையில், சூழ்ச்சியான முறையில் அரசை அமைக்கும் நடவடிக்கை சாத்தியப்படாது .
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் எவ்வித பிரச்சினையும் இல்லை
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் எவ்வித பிரச்சினையும் இல்லை. கட்சியைத் தோற்கடித்த ஊழல்வாதிகள் உள்ளிட்ட திருட்டுக் கும்பலுக்கும் தூய எண்ணத்துடன் கட்சியின் கொள்கைகளைப் பின்பற்றி முன்னோக்கி செல்லும் தரப்பினருக்கும் இடையிலேயே பிரச்சினை நிலவுகின்றது
பல்வேறு கூட்டங்களை நடத்திக்கொண்டிருப்பவர்களின் நோக்கம் கட்சியின் வெற்றியல்ல எனவும் அவர்கள் ஊழலுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்கே அழுத்தம் பிரயோகிக்க முயற்சிக்கின்றனர்.
கூட்டு எதிர்க்கட்சி ஹைட் பார்க்கில் நடத்திய கூட்டத்தில் 11 ஆயிரத்து 900 பேர் வரையில் கலந்துகொண்டதாக அரச புலனாய்வுப் பிரிவு அறிவித்துள்ளது
இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் ஆட்சியாளார், திரண்டிருக்கும் மக்களின் எண்ணிக்கையை நீதிமன்றம் உணர வேண்டும் என அறிவிவித்திருந்தார்.
மக்கள் பலத்தைக் காண்பித்து விசாரணை அதிகாரிகள் மற்றும் நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்தில் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை இந்தக் கூற்றின் மூலம் புலப்படுகின்றது.
ஊடகவியலாளர்கள் சிலர் குறித்து ஜனாதிபதி கவலை
ஊடகவியலாளர்கள் சிலர் நடந்த கொள்ளும் நிலைமையைப் பார்க்கின்றபோது கவலையடைகின்றேன். கடந்த ஆட்சியில் எத்தனை ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். கடத்தப்பட்டு தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டனர். ஊடக நிறுவனங்கள் எரிக்கப்பட்டன. சீல் வைக்கப்பட்டன என்பதை நீங்களும் அறிவீர்கள். கடந்த ஆட்சியின்போது செய்திகளைப் பார்த்து தொலைபேசி எடுத்து ஊடகவியலாளர்கள் நேரில் அச்சுறுத்தப்பட்ட வரலாற்றையும் எளிதில் மறந்துவிடமுடியுமா? இப்படியான மோசமான ஆட்சியை மீண்டும் கொண்டுவரவா முற்படுகின்றனர் எனக் கேட்கின்றேன்.
நாம் தோற்கடித்த கொடிய ஊழல் நிறைந்த ஆட்சியை மீண்டும் அதிகாரத்திற்குக் கொண்டுவருவதற்காக இவர்கள் முனைகின்றனர் என எண்ணும்போது கவலையாகவுள்ளது. தயது செய்து பக்கச்சார்ப்பற்ற முறையில் பொறுப்புடன் செயற்படுமாறு வேண்டுகின்றேன்.
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் பெறுவோம்
தடைசெய்யப்பட்டிருந்த மீன் ஏற்றுமதி நீக்குவதற்கும், ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கும் உதவி வழங்குமாறு மோல்டாவில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொண்ட பிரிட்டனின் பிரதமர் டேவிட் கமரூனிடம் கோரிக்கையை விடுத்துள்ளேன். நாம் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மீன் ஏற்றுமதித் தடை நீக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் சாதகமான தகவல்கள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன” – என்றார்.