Ad Widget

இலங்கையைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைவோம்! யாழில் ஜனாதிபதி

“நல்லிணக்கத்தை ஏற்படுத்தி இலங்கையைக் கட்டியெழுப்பி முன்கொண்டு செல்வதற்கு அனைத்து மக்களும் ஒன்றுபடவேண்டும்.”- இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

maith-

சாரணர் இயக்கத்தின் தேசிய ஜம்போரி ஆரம்ப நிகழ்வு நேற்று மாலை யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு அறைகூவல் விடுத்தார்.

அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்,

“சர்வதேச சாரணர் தினத்தை நினைவு கூர்ந்து தேசிய சாரணர் ஜம்போறியை வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் நடத்துகின்றீர்கள். அதில் பங்கேற்பதில் நான் மகிழ்சியடைகின்றேன். விசேடமாக யாழில் இவ்வாறான நிகழ்வொன்றை முன்னெடுத்தமைக்காக அனைவருக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்த நிகழ்வில் அணிவகுத்து நிற்கும் சாரணர்களைப் பார்க்கும் போது நான் சிறுவான இருந்த காலத்தில் சாரணர் இயக்கத்தில் இணைந்து செயற்பட்டமை நினைவுக்கு வருகின்றது. இற்றைக்கு 48 ஆண்டுகளுக்கு முன்னதாக பாடசாலை மாணவனாக இருந்த காலத்தில் பொலனறுவையில் சாரணர் இயக்கத்தில் இணைந்து செயற்பட்டிருந்தேன்.

சாரணர் இயக்கம் சிறந்த மனிதர்களை உருவாக்கியுள்ளது. இதற்கு உலகில் பல உதாரணங்கள் காணப்படுகின்றன. நானும் சாரணராக பணியாற்றியதாலோ என்னமோ தற்போது நாட்டின் ஜனாதிபதி என்ற உயர் பதவியை வகிக்கின்றேன். சாரணர் அமைப்பில் தம்மை இணைத்துள்ள பிள்ளைகளில் தான் எமது நாட்டின் எதிர்கால ஜனாதிபதிகள் இருக்கின்றார்கள் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

சாரணர்களைப் பொறுத்தவரையில் முக்கியமான விடயமொன்றை கூறிவேண்டும். சாரணர்கள் மனிதாபிமானம், அன்பு, ஆதரவு, இரக்க குணங்களை உடையவர்கள். பொறாமை, கோபம், குரோதம், வைராக்கியம் ஆகிய குணங்கள் சாரணர்களிடத்தில் ஒருபோதும் இருப்பதில்லை.

எமது நாட்டில் காணப்படும் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெறுவதற்கு சாரணர் இயக்கம் எதிர்காலத்தில் காத்திரமான பங்களிப்பை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அனைத்து மக்கள் மத்தியிலும் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு சாரணர் இயக்கம் உறுதுணையாக நிற்கும்.

சாரணர் இயக்கத்தில் இன,மத,குல, வேறுபாடுகள் கிடையாது. உலகம் பூராகவும் 42 மில்லியனுக்கு அதிமானவர்கள் சாரணர் இயக்கத்தில் அங்கத்துவத்தைக் கொண்டிருக்கின்றார்கள்.

சாரணர்கள் பிறருக்கு உதவிகளை வழங்குவதையும், தேவைகளை நிறைவேற்றுவதையும் பிரதானமான செயற்பாடுகளாக கொண்டிருக்கின்றார்கள். அதனால் சாரணர் இயக்கத்தின் பெறுமதி என்றுமே குறைவடைவதேயில்லை. சாரணர் இயக்கமானது இந்து, பௌத்த மதங்களில் கூறப்பட்டுள்ள தத்துவங்களுடன் பின்னிப்பிணைந்து காணப்படுகின்றது.

நாட்டைக் கட்டியெழுப்பி முன்கொண்டு செல்வதற்கு அனைத்துமக்களும் ஒன்றுபடவேண்டும். நாட்டை ஒன்றுபடுத்துவதென்பது அனைத்து மக்களை ஒன்றுபடுத்துவதேயாகும். ஆகவே, நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நாட்டை கட்டியெழுப்பி முன்கொண்டு செல்வதற்கு அனைவரும் ஒன்றுபடுவோம்.

இந்த சாரணர் ஜம்போரியில் கலந்து கொண்டுள்ள பிள்ளைகளை பாருங்கள். அவர்களிடம் எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லை. அவர்களிடத்தில் வேறுபாடுகள் இல்லை. ஒருவருடன் ஒருவர் ஒற்றுமையாக மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள். கோபம், பொறாமை, வைராக்கியம், குரோதம் எதுவுமே இல்லாது இருக்கின்றார்கள்.

சாரணர் இயக்கத்தை மேலும் மேம்படுத்துச் செல்ல அவர்களின் எதிர்காலச் செயற்பாடுகளை வலுவுள்ளதாக்க அரசு என்ற வகையில் அனைத்து விதமான உதவிளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு தயாராகவுள்ளேன். அவர்களது வேண்டுகோள்களை நிறைவேற்றுவதற்கும் தயாரகவுள்ளேன் என்பதை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன்.

யாழில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த தேசிய சாரணர் நிகழ்வில் தெற்கில் உள்ள பிள்ளைகள் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டிருக்கின்றனர். வடக்கில் உள்ள பிள்ளைகள் தெற்கிலுள்ள பிள்ளைகள் கலந்துகொண்டிருக்கின்றார்கள் என்பதால் மகிழ்ச்சியுடன் இருக்கின்றார்கள். அனைத்துப் பிள்ளைகளுக்கும் ஒரே இரத்தம்தான் காணப்படுகின்றது. இவர்களை முன்னுதாரணமாக் கொண்டு அனைவரும் ஒன்றுபடவேண்டும் என்று இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றேன்” – என்றார்.

சாரணர் இயக்கத்தின் ஆணையாளர் பேராசிரியர் நிமால் டி சில்வா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் ஏ.நடராஜன், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அங்கஜன் உட்பட அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சாரணர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Related Posts